உள்நாடு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக றிபாஸ் மௌலவி நியமனம்…!

முல்லைத்தீவு – ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று (13) இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார். நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளரும் , வவுனியா சிறைச்சாலை மேற்பார்வையாளர்குழு தலைவருமான சிறாஜுதீ்ன் நிப்றாஸ் முஹம்மதின் விஷேட சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட கால வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், முஸ்லிம் ஒருவருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். அகில இலங்கை சமாதான நீதவானான இவர், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் விவாக பதிவாளராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார்.

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரான மௌலவி லெப்பை தம்பி றிபாஸ் காஸமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பான “சில்சிலா” வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.

அத்துடன், சமூக சேவைகளை முன்னெடுக்கும் சில அமைப்புக்களுடன் இணைந்து தொண்டராக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர், முல்லைத்தீவு – ஹிஜ்ராபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

இவர் முல்லைத்தீவு – ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை தம்பி – ஆமினா உம்மா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்ட வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் இவ்வாறு திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிப்பதற்கு முழு வீச்சுடன் செயற்பட்ட நீதி, மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளரும் , வவுனியா சிறைச்சாலை மேற்பார்வையாளர்குழு தலைவருமான சிறாஜுதீ்ன் நிப்றாஸ் முஹம்மதுக்கு முல்லைத்தீவு மாவட்ட உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் சிவில் அமைப்புக்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *