நாடளாவிய ரீதியில் பரவும் இன்ஃபுளுவென்சா: சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்.
நாடளாவிய ரீதியில் காய்ச்சல் பரவிவரும் நிலையில், சடுதியான காய்ச்சல், இருமல், தொண்டைபுண், மூக்கில் இருந்து சளி அல்லது திரவம் வடிதல், மூக்கு அடைப்பு மற்றும் உடல் வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்குமாயின் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் சிவப்பு எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த காய்ச்சல் நிலவரம் தொடர்பாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், குழந்தைகள் மத்தியில் மிகவும் வேகமாக இந்த நோய் தொற்று காணப்படுவதாகவும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது உன்னிப்பாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவும் இவ்வாறான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அவர்களை பரிசோதித்ததில் ‘இன்ஃபுளுவென்சா ஏ’ (influenza) தொற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ‘இன்ஃபுளுவென்சா பி’ தொற்றும் பரவலாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள். அசட்டை தனமாக இருந்துவிடவேண்டாம். இன்ஃபுளுவென்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக் கூடியவர்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் ஆகியோர் அடங்குவர்.
கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்ஃபுளுவென்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய காய்ச்சல் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மாதிரிகள் தினசரி தேசிய காய்ச்சல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.