பக்கர் ஸமான் மற்றும் ரிஸ்வானின் இணைப்பாட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் 2ஆவது போட்டியில் பக்கர் ஸமான் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகியோரின் சதம் கடந்த இணைப்பாட்டத்தால் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 1:1 என சமன் செய்தது.
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி திரில் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு லோர்கன் டக்கர் 51 ஓட்டங்களையும் , ஹெரி டெக்டர் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் சஷீன் அப்ரீடி மற்றும் அப்பாஸ் அப்ரீடி ஆகியோர் தலா 3 மற்றும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் சவால்மிக்க 194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரரான சைம் ஐயூப் (6) , பாபர் அஸாம் (0) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர். இருப்பினும் 3ஆவது விக்கெட்டில் இணைந்த ரிஸ்வான் மற்றும் பக்கர் ஸமான் ஜோடி மிகச் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கி அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றது. தத்தமது அரைச்சதங்களை பதிவு செய்த இருவரும் தமக்கிடையில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க பக்கர் ஸமான் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த அஸாம்கான் அதிரடியில் மிரட்டி 10 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற முஹம்மது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 75ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க பாகிஸ்தான் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 1:1 என சமன் செய்தது.
(அரபாத் பஹர்தீன்)