முல்லைத்தீவைச் சேர்ந்த ரமீம் முஹம்மது ராசித் (நளீமி) கிராம உத்தியோகத்தராக நியமனம்.
முல்லைத்தீவு – தண்ணீரூற்றைச் சேர்ந்த ரமீம் முஹம்மது ராசித் (நளீமி) கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்றுள்ளார்.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே முல்லைத்தீவு – தண்ணீரூற்றைச் சேர்ந்த ரமீம் முஹம்மது ராசித் (நளீமி) கிராம உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிடைத்த ஒரேயொரு முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் இவர் ஆவார். கற்பிட்டி – நுரைச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரை கல்வி கற்ற இவர், முல்லைத்தீவு – தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரை பயின்றார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இவர், 2015 ஆம் ஆண்டு பேருவளை ஜாஆமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு தெரிவாகி ஏழு வருடங்கள் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை கற்று 2022 இல் நிறைவு செய்தார்.
மேலும், இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப்படிப்பையும் தொடர்கிறார். முல்லைத்தீவு – தண்ணீரூற்று ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினரான இவர் விளையாட்டு, சமூக சேவைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ரஸீன் ரஸ்மின்)