இன்று சர்வதேச அன்னையர் தினம்: அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரக்கப்படுகிறது…!
பூமியில் தன்னலமற்ற தன்மையை சுமந்தவள் தாய். பிறப்பதற்கு முன்பே தன் குழந்தைகளை நேசிக்க ஆரம்பிக்கிறாள் அவள்.
தன் உடலை, உணர்வுகளை, ஆசைகளை எல்லாமே விருப்பத்தோடு அர்ப்பணிக்கிறாள். இந்த அர்ப்பணிப்புகள் அழகான மனிதனை வெறும் கண்களால் காண வரமாய் அமைகின்றது.
ஒரு குழந்தைக்குத் தெரிந்த முதல் நபர் தாய்.
குழந்தை கருத்தரித்த தருணத்திலிருந்து, அது தனது தாயுடன் பழக ஆரம்பிக்கிறது.
உறவு கொள்கிறது.
உடலால் இணைகிறது.
உணர்வால் இணைகிறது.
அறிவால் இணைகிறது.
தொப்புள் கொடி குழந்தையை தாயுடன் இணைக்கிறது.
இந்த இணைப்பு அழகாக இணைகிற பொழுது ஆரோக்கியமான மனிதன் உலகுக்கு தயாரிப்பு செய்யப்படுகிறான்.
ஒன்பது மாத கருவறை வாழ்க்கை தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும் இடையே நீடித்த பிணைப்பை உருவாக்க பயன்படுகிறது,
ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
இதை அழகான ஆரம்பமாக, மகிழ்ச்சியான ஆரம்பமாக ஆரம்பிக்கும் போது மட்டுமே அழகான சமூகம் உருவாக வளமான வித்து தூவப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம்.
ஒரு குழந்தையின் உலகம் அதன் தாயைச் சுற்றியதாகவே ஆரம்பிக்கிறது என்பதுவே உண்மை.
தன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய நபர்களில் தனது தாய் முதன்மையானவர் என்று நம்புகிறது.
பிறப்பிலிருந்தே, ஒரு குழந்தை தனது தாயை நம்ப கற்றுக்கொள்கிறது. இந்த நம்பிக்கை சார்ந்த உறவிலிருந்து, குழந்தை தன் வாழ்க்கையில் மற்றவர்களுடன் நம்பிக்கையை வளர்க்க கற்றுக்கொள்கிறது.
அதனால் தாய்மையால் பாக்கியம் பெற்ற ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஒரு நேர்மறையான முன்மாதிரியை வழங்க வேண்டியவளாக இருக்கிறாள்.
குழந்தையின் நம்பிக்கை என்பது தாயை அடிப்படையாகக் கொண்டதாக அமைவதாக இருந்தால், தன்னை தரமான தாயாக மாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு தாயிடம் இருக்க வேண்டும். நல்ல மனிதர்களை உருவாக்கும் ஆசையும் நம்பிக்கையும் எந்தத் தாயிடம் இருக்கிறதோ அந்தத் தாயிடம் இருந்து தான் நம்பிக்கையும் நாணயமும் உள்ள சமூகம் உருவாகும்.
தாய்மைக்கான நிபந்தனையற்ற அன்பையும் பாதுகாப்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொள்வது ஒவ்வொரு கணவரின் கடமையாக இருக்க வேண்டியதுடன் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் சிறந்த தாய்மார்களை உருவாக்கும் பொறுப்பு சமூக அமைப்புகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு என்பதை புரிந்து அதற்கான அத்திவாரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்கிறோம்.
அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்