கட்டுரை

உச்சி வெயிலின் உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படி…? – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்குகிறார் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜலீலா முஸம்மில்

“தற்காலத்தில் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு பாரிய பிரச்சினையாக, கோடை வெயிலின் கொடூரத்தைக் குறிப்பிடலாம். வழமைக்கு மாற்றமாக சூழலில் கடும் வெப்ப நிலை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. ஆடைகள் நனைந்து வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கின்றோம். அனல் காற்றை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அதிக வெக்கை காரணமாக, மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வேளைகளில் வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வேளையில் அம்மை, கண் வருத்தம், உடலில் நீரிழப்பு, முதுகுப் புறத்தில் சூட்டுக் கொப்புளங்கள், வியர்க்குரு, சிறு நீர்த் தொற்று, பொடுகுத் தொல்லை, வலிகளுடன் கூடிய முகப்பரு, அதிகமான கண் எரிச்சல், தூக்கமின்மை, உடல் எரிச்சல், வாய்ப்புண் வருதல், அரிப்பு, தேமல், சிறு நீரகக் கற்கள் போன்ற உபாதைகளின் காரணங்களினால் அவஸ்தைக்கு உள்ளாகும் நிலைமை அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலைமைகளைச் சமாளித்து வாழ்க்கையை சுமூகமாக மாற்றி அமைக்க, எவ்வாறான எளிய வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்”.

இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது சாலச்சிறந்தது.

“எமது உடல் சுமார் 75 வீதம் நீர்த் தன்மையால் ஆக்கப்பட்டுள்ளது. நீரை உட்கொள்ளாவிட்டால், நாம் உயிர் வாழ்வது கடினம். மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் (36.1–37.0) ஆகும். சுற்றுப்புற வெப்ப நிலை, சராசரி வெப்ப நிலையை விட அதிகமாகும் போது வியர்வை மற்றும் தோலுக்கு அதிக இரத்த ஓட்டம் செல்வதன் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி, உடல் சராசரி வெப்ப நிலையை அடைகிறது.
கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது, உப்புச் சத்துப் பற்றாக் குறையும் நீர்ச்சத்துப் பற்றாக் குறையும் ஏற்படுகின்றன. இதனால், அதிக தாகம், தலை வலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப் பிடிப்பு, குறைந்த அளவு சிறு நீர் , செறிவான கடும் மஞ்சள் நிற சிறு நீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
கோடை காலங்களில் ஏற்படும் நீரிழப்பானது (dehydration), இலகுவாகக் குணமடையச் செய்யக்கூடியது. ஆனால், அதைத் தீர்க்காது போய்விடின் உயிரிழப்புக்கள் கூட சம்பவிக்கலாம். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில், மக்கள் அதி கூடிய கவனம் எடுத்து, தமது உடம்பில் நீர்த்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
01) போதுமான அளவு குளிர்ந்த நீரையே இயன்றளவு அருந்திக் கொள்வது. சூடான நீராகாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது. நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க, தினமும் 4 முதல் 5 லீற்றர் வரை சுத்தமான குடி நீரைப் பருகுவது.
02) கோடை காலங்களில் பரவலாக விற்கப்படும் நீர்ச்சத்து மிக்க பழங்களை அடிக்கடி சாப்பிடுதல்.
உதாரணமாக,
வத்தகைப் பழம், வெள்ளரிப் பழம், நுங்கு, இள நீர், இயற்கையான பானங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
03) மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றுவதைத் தவிர்த்தல் நல்லது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது மிக அவசியமாகும்.
04) இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து பருத்தியில் (கொட்டன்) நெய்யப்பட்ட உடைகளைத் தளர்வாக அணிவது. அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்து மெல்லிய நிறங்களிலான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது சிறந்தது.
05) வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் (வெயில் பாதுகாப்புக்கான கிரீம்) பூசிவிட்டு வெளியே செல்வது. இது தவிர, தொப்பி, கூலிங்கிளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்வதும் நல்லது.
06) தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தூய்மையான நீரில் குளிப்பது.
07) வீட்டு வாசல்களையும் யன்னல்களையும் திறந்து வைத்து காற்றோட்டமான சூழலை ஏற்படுத்துவது.
08) குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பவர்கள், காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது.
09) அதிக உடல் உழைப்பு அதிக உடற் பயிற்சி போன்றவற்றை கோடை காலத்தில் தவிர்த்துக் கொள்வது நல்லது.
10) மதுபானம் அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. இது உடலில் இருந்து நீர் இழப்பை அதிகரிக்கச் செய்து, சிலவேளை பக்கவாத நிலைமையைக்கூட உருவாக்கும்.
11) வெப்ப அலையின் தாக்கத்தால் ஏற்படும் தலைச் சுற்றல், வாந்தி, குமட்டல், உடல் சோர்வு, பலவீனம், மயக்கம், அதிக அளவு தாகம், தலை வலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுதல் மிக முக்கியமாகும். இவை யாவும் உடலின் நீரிழப்பிற்கான எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.
12) வெயில் காலத்தில் மொட்டை மாடி கொங்கிரீட் தளங்கள் போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுவது. ஏனெனில், இவை அத்தனையும் சூரிய வெப்பத்தை அதிகம் பிரதிபலித்து, உடம்பிலிருந்து நீரிழப்பை அதிகளவில் ஏற்படுத்தி விடக் கூடும்.
13) வெயில் படக்கூடிய இடத்தில் காணப்படும் உலோகப் பொருட்களை, கைகளால் தொடாமல் இருப்பது. அவை அதிக வெப்பமடைந்து, தீக்காயங்களை உண்டாக்கும் அபாய நிலைமைகளை ஏற்படுத்தும்.
14) கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் இலகுவாக செரிமானம் ஆகாத உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது.
ஆகவே, இதுபோன்று தற்காப்பு முறைகளைக் கடைப்பிடித்து, இந்தக் கோடை வெயிலின் அதி தாக்கத்திலிருந்து சிறிதளவேணும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சிப்போம்” என்றும் டாக்டர் ஜலீலா முஸம்மில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *