உள்நாடு

ஷாதுலிய்யா தரீக்காவின் புதிய கலீபாக்களுக்கான நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு..!

இலங்கையில் ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஆன்மீகப் பணிகளை மேலும் செவ்வனே முன்னெடுத்துச் செல்லும் வகையில் இத்தரிக்காவின் உலக ஆன்மிகத் தலைவர் சங்கைக்குரிய செய்கு ஸஜ்ஜாதா அஷ் செய்ஹ் மஹ்தி அப்துல்லாஹ் அல்பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி அவர்களினால் புதிதாக ஆறு கலீபதுஷ்ஷாதுலிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீனன்கோட்டை,பேருவளை மருதானை,தர்கா நகர் வாழைச்சேனை மற்றும் காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆறு உலமாக்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் 4 பேருக்கான நியமனக் கடிதம் பேருவளை மருதானை ஷாதுலிய்யா ஸாவியாவில் நடைபெற்ற 157ஆவது வருட ஷாதுலிய்யா மனாக்கிப் தமாம் மஜ்லிஸின் போது கலீபத்துல் குலபா அஷ்ஷாதுலி மௌலவி அல்-ஹாஜ் எம்.இஸட்.முஹம்மத் ஸுஹுர் (பாரி) மற்றும் சங்கைக்குரிய ஸாதாத்மார்களினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மௌலவி அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.பாரூக் (மக்கி) பேருவளை, மௌலவி மபாஸுல் ஹுஸைன் (பஹ்ஜி) தர்கா நகர்,மௌலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம்.பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ.) பேருவளை,மௌலவி அப்துல் மஜீத் (ஷர்கி) வாழைச்சேனை ஆகியோருக்கே இவ்வாறு நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டதோடு கலீபதுல் குலபாவுக்கான ஷேக் நாயத்தின் அதிகாரப்பூர்வமான கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பு உம்மு சாவியா நிர்வாக சபை தலைவர் தேசபந்து அல்-ஹாஜ் மக்கி ஹாசிம்,மஸ்ஜிதுல் அப்ரார் ஜமாத் சபை தலைவர் தேசமான்ய சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.ஏ.எம்.ஹனபி,கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவிகள் ஏ.எச்.எம்.அஜ்வாத் (அல்-பாஸி) அஹ்மத் சூபி (மஹ்ழரி) ஆகியோரினால் கடிதம் கையளிக்கப்பட்டது.

கலீபதுஷ்ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம்.ரபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்ற இம்மஜிலிஸில் கலீபதுல் குலபா,கலீபாதுஷ்ஷாதுல்களான மௌலவிகள் எம்.எம்.ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) ஏ.எச்.எம்.அஜ்வாத் (அல்-பாஸி) எம்.எஸ்.எம்.பைரூஸ் (பஹ்ஜி) ஆகியோர் ஹழராவை நடாத்தினர்.

அஸ்ஸெய்யித் ஹஸன் மௌலானா அல் காதிரி,ஸாவியா நிர்வாகிகளான தேசகீர்த்தி அல்-ஹாஜ் எம்.ஜாபீர் முஹம்மத்,அல்-ஹாஜ் எம்.பயாஸ் ஜெஸுல் ஜே.பி.,அப்ரார் பள்ளிவாசல் தர்ம கர்த்தாக்களான அல்-ஹாஜ் எம்.அதாவுல்லாஹ் அபூபக்கர்,எம்.ஹுஸைப் இலங்கை அத்தியாயதுஷ் ஷாதுலிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எச்.எம்.முஸாதிக் உட்பட உறுப்பினர்கள்,உம்மு ஸாவியா முக்கியஸ்தர்கள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கலீபாக்கள்,முகத்தமீன்கள்,முன்ஷிதீன்கள்,முஹிப்பீன்கள் பெருமளவிலான மக்கள்,டாக்டர்களான எம்.ஆர்.பஸியுல் லிஸான் எம்.நூருல் இஸ்லாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் அல் குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்கர் இமாம் அபுல் ஹஸன் (ரலி) அவர்களின் 850ஆவது ஜனன தினத்தையும்,அல் குத்புல் வுஜுத் அஸ்ஸெய்யித் அஷ் செய்ஹ் முஹம்மத் அஜ்வாதுல் பாஸியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் 226 ஆவது ஜனன தினத்தையும் முன்னிட்டு 157 வது வருடமாகவும் இந்த ஸாவியாவில் மனாகிப் மஜ்லிஸ் சிறப்பாக இடம் பெற்றது.

கலீபதுல் குலபா மௌலவி எம்.இஸட்.முஹம்மத்ஸுஹுர் (பாரி) இங்கு பேசும்போது ஆன்மீகத்திற்கும் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கிய தரிக்கவாக எமது ஷாதுலிய்யா தரீக்கா திகழ்கிறது. தரீக்கா காட்டிய திக்ர்,ஸலவாத் உட்பட ஏனைய நல்ல அமல்களை கொண்டு ஸாவியாக்களை உயிரூட்டுவோம்.ஷாதுலிய்யா தரீக்கா இன்று முழு உலகிலும் பல கோடி மக்களால் பின்பற்றப்படுகிறது என்றார்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *