உள்நாடு

வெள்ளப் பாதிப்பு நஷ்டஈட்டை விவசாயிகளுக்கு அரசு விரைவில் வழங்க வேண்டும்.. -பாராளுமன்றத்தில் ஹரீஸ் எம்.பீ

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென விவசாய அமைச்சர் வாக்குறுதியளித்த நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகளின் நிலைமையை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்வேகத்துடன் நெற்செய்கையில் ஈடுபடும் விதமாக அவர்களின் நஷ்டஈட்டை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் வைத்து வேண்டுகோள் விடுத்து உரை நிகழ்த்தினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தனது உரையில் இந்த வருட ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய செய்கை வெள்ளத்தில் அள்ளுண்டு அழிந்து போனது. அதுமட்டுமின்றி முக்கிய நீர்ப்பாசன அணைக்கட்டுகள் வெள்ளத்தினால் உடைந்துள்ளது. விவசாயிகள் பயன்படுத்திய வண்ட் வீதிகள் அடங்களாக சிறிய வீதிகள் பலதும் பழுதடைந்தும், முற்றாக அழிந்தும் போகியுள்ளது. இதனால் விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்துள்ள சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட உட்கட்டமைப்பும் சீரழிந்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட காலத்தில் அப்போதைய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக இருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை வழங்க கோரியிருந்தோம். அவற்றை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை வழங்க அவர் இணக்கம் தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக அந்த நஷ்டஈடு விவசாயிகளுக்கு இந்த நிமிடம் வரை கிடைக்காமலே உள்ளது.

அந்த விவசாயிகள் இன்று அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான ஊக்கத்தை வழங்கும் விதமாகவும், அவர்கள் உத்வேகத்துடன் நெற்செய்கையில் ஈடுபடும் விதமாகவும் அவர்களின் நஷ்டஈட்டை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த சபையில் வைத்து கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

 

 

(நூருல் ஹுதா உமர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *