உலக நீர் தினத்தை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொண்டாடிய அமானா வங்கி..!
உலக நீர் தினத்தை முன்னிட்டு, நீர் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான செயன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துடன் அமானா வங்கி கைகோர்த்திருந்தது. “சமாதானத்துக்கு நீர்” (‘Water for Peace,’) எனும் சர்வதேச தொனிப்பொருளுக்கமைவாக, பல்கலைக்கழகத்தினால் சுவரொட்டி போட்டியொன்று பட்டம் பயிலும் மாணவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வளர்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் புலமையாளர்களுக்கு தமது ஆக்கங்களை சமர்ப்பிக்கவும், தகவல்களடங்கிய கல்விசார் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் லசந்த மானவடு, பங்கேற்றிருந்தவர்கள் மத்தியில் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் முக்கியமான உரையை ஆற்றியிருந்தார்.
அமானா வங்கியின் மூலோபாய முகாமைத்துவம் மற்றும் நிலைபேறாண்மைக்கான உப தலைவர் பஸ்லி மரிக்கார் கருத்துத் தெரிவிக்கையில், “சூழல்சார் நிலைபேறாண்மைக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கு அமானா வங்கி அர்ப்பணிப்புடன் ஆதரவளிக்கின்றது. உலக நீர் தின கொண்டாட்டங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து செயலாற்றுவதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எமது மக்களுக்கு நட்பான வங்கியியல் வழிமுறையினூடாக, இதுபோன்ற அர்த்தமுள்ள செயற்பாடுகளில் எமது ஆதரவினூடாக, சமூகத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். நாம் இணைந்து சவால்களை கடந்து செல்லும் நிலையில், எமது நாட்டின் எதிர்கால தலைமுறையினர் மத்தியில் நிலைபேறாண்மையை கட்டியெழுப்புவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.