புத்தளம் முன்னாள் காதி நீதிவானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!
புத்தளம் முன்னாள் காதி நீதிபதியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் சார்பில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும், குறித்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிவான், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, புத்தளம் பதில் காதி நீதிமன்ற நீதிபதியாக நீர்கொழும்பு காதி நீதிமன்ற நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், புத்தளம் காதி நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளின் கோவைகள் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக ஒப்படைக்கப்படாத காரணத்தினால் பழைய வழக்குகளை தொடர முடியாத நிலை காணப்படுவதாக புத்தளம் பதில் காதி நீதிவான் அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) தெரிவித்தார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த கோவைகள் மற்றும் ஆவணங்கள் கிடைத்த பின்னரே பழைய வழக்குகளை தொடர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதிய வழக்குகளை பொறுப்பெடுத்து புத்தளம் காதி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் புத்தளம் பதில் காதி நீதிபதி அஷ்ஷெய்க் எம்.எம்.முஹாஜிரீன் (இஹ்ஸானி) மேலும் தெரிவித்தார்.
எனவே, புத்தளம் காதி நீதி நிர்வாக பிரிவிலிருந்து புதிதாக வழக்குகள் தாக்கல் செய்ய எதிர்பார்த்திருப்பவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் காலை 8 மணி முதல் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பதில் காதி நீதிவான் அறிவித்துள்ளார்
(ரஸீன் ரஸ்மின்)