மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இன்று தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென கோருகின்றனர்.. -வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமத்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் தான் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் தேர்தலை ஒத்திப் போடுமாறும் கூக்குரலிட்டவர்கள். ஆனால் இவர்கள் தான் இன்று தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளருடனான சந்திப்பிலேயே இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.
புதிய ஆளுநர் நசீர் அஹமட் தலைமையில் மாகாண சபை வளாகத்தின் லிச்சாவி மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாணத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்தி வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும். எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள குருநாகல், தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது அதனை தூக்கி நிறுத்திய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே.
மேலும் எதிர்காலத்தில் வடமேல் மாகாணத்தில் சகல துறைகளையும் சிறந்த வளமுள்ள துறைகளாக மாற்றி வடமேல் மாகாணமாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுனர் நசீர் அகமட் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தென் மாகாணத்தின் புதிய ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, வடமேல் பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் , நயன காரியவசம், ஆளுநரின் செயலாளர் இந்திக்க இளங்ககோன் மற்றும் பல அமைச்சுத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)