உள்நாடு

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்ரிக் மெகார்த்தி (Patrick McCarthy) அவர்கள், சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பகுப்பாய்வாளர் நெத்மினி மெதவல அவர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தினர்.

இதன்போது தமது அரசியல் கலாசாரமானது தொடக்கத்தில் இருந்தே ஒழுக்கநெறிக் கோவையை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்பதை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *