விளையாட்டு

உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற்ற சமரி தலைமையிலான இலங்கை அணி நாடு திரும்பியது.

9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் பங்கேற்று வெற்றிக் கிண்ணத்தை தனதானக்கியதுடன் உலகக்கிண்ணத்திற்கான தகுதியையும் பெற்றுக் கொண்ட சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 9ஆவது மகளிர் ரி20 உலகக்கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் தரப்படுத்தலில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் நேரடித் தகுதி பெற்றிருக்க 9ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி தகுதிகாண் போட்டியில் பங்கேற்று அதில் முதல் இரு இடங்களைப் பிடித்தால் மாத்திரம் உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பைபப் பெரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தகுதிகாண் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை மகளிர் அணி குழு நிலை லீக் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. பின்னர் அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன் 9ஆவது உலகக்கிண்ணத் தொடருக்கான வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அணித்தலைவியான சமரி அத்தபத்துவின் அசத்தல் சதத்தின் உதவியால் 68 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி தகுதிகாண் போட்டித் தொடரின் சம்பியன் மகுடத்தை தனதாக்கியிருந்தது. அத்துடன் இன்றைய தினம் உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்று கிண்ணத்துடன் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்ததுடன் இலங்கை மகளிர் அணிக்கு அங்கு மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *