புத்தளத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா.
புத்தளத்தில் கோலாகலமாக இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதான மின்னொளியில் சிறுவர்கள் இளையவர்களின் குதூகலத்தோடு கொண்டாடப்பட்டது.
மூட்டை அடித்தல், கயிறு இழுத்தல், டயர் உருட்டுதல், ஆள் தூக்கி ஓடுதல், சாக்கோட்டம், குரங்கு ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டிகள், கதிரை சுற்றுதல், தொப்பி மாற்றுதல், வினோத உடை போட்டிகளும் நடைபெற்றன.
புத்தளம் நகர வரலாற்றில் நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்டதாக இடம்பெற்று வந்த ஓட்டப்பந்தய மைதான நிகழ்வுகளில் இடம்பெற்று வந்த பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இன்று அருகி வருவதையும் சிறுவர்கள் இளைஞர்கள் பங்குபற்றுதல்கள் வழக்கொழிந்து வருவதையும் கருத்தில் கொண்ட புத்தளம் பாரம்பரிய விளையாட்டு கழகத்தின் தோற்றமும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள இப்போட்டிகளும் புத்தளம் மாநகரில் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரதான அனுசரணையாளர் ஏ.எம்.மஜாஸ், அமேசன் கெம்பஸ் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார், ஜெயா பார்ம் பர்வீன் ராஜா ஆகியோர் திகழ்ந்தனர். கூடவே புத்தளம் நகர வர்த்தகர்களின் பணப்பரிசில்கள், பரிசு பொதிகள், தங்க ஆபரணங்கள் என்பன பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுக்கு உயிரூட்டி இன்னும் மெருகூட்டியது.
புத்தளம் சமூகத்தில் அன்று தொட்டு பேணப்பட்டு வரும் கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கையளிக்கும் பணிகளை மூத்த இளைய சமூக ஆர்வலர்கள் இணைந்து முன்னெடுத்த இந்தக் கன்னி முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)