மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான மையத்தினால் காத்தான்குடியில் கண் சிகிச்சைகளுக்கான முகாம்.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தினால் கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டம் ஒன்றை கடந்த 04ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காத்தான்குடியில் ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கதானி தெரிவித்தார்.
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கஇ இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சாலமன் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயச்சிகளின் அடிப்படையிலுமே இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல், மருந்து மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு வழங்குதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
இத்திட்டமானது, கடந்த காலங்களில் இலங்கைக் குடியரசு உட்பட அனைத்து நாடுகளிலும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களின் தொடராகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 06ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தென்னிலங்கையில் வலஸ்முல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் இவ்வாறான தன்னார்வத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையமானது தான் மேற்கொள்ளும் பணிகளில் உயர்ந்த மனிதாபிமான இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை நம்பியுள்ளது.
உலகில் எப்பகுதியில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் போன்றவைகளை வழங்குவதை, துல்லியமான கண்காணிப்பு பொறிமுறை மற்றும் மேம்பட்ட மற்றும் விரைவான போக்குவரத்து முறைகள் மூலம் மேற்கொள்கிறது.
பயனாளி நாடுகளில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அதிக நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச மற்றும் உள்ளூர் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் உதவி பெறப்பட்டு அவர்களினூடாக உதவிகளைப் பகிர்ந்தளிக்கிறது.
இம்மையத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் பயனாளிகளுக்கும் அவர்கள் வாழும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பது உதவிகள் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகிறது.
நிவாரணப் பாதுகாப்பு, முகாம் நிர்வாகம், தங்குமிடம், முன்கூட்டியே மீட்பு, பாதுகாப்பு, கல்வி, நீர், சுற்றுச்சூழல் சுகாதாரம், ஊட்டச்சத்து, சுகாதாரம், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆதரவு, தளவாடங்கள் மற்றும் அவசரகால தகவல்தொடர்புகள் போன்ற நிவாரண மற்றும் மனிதாபிமானப் பணிகளின் அனைத்துத் துறைகளும் இந்த உதவியில் அடங்கும்.
மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையமானது பல அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் துறையில் உலகளாவிய முன்மாதிரியாக இருக்க முயல்கிறது:
கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த மையத்தினால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பொதுவான புள்ளி விவரங்களின்படிஇ உலகின் 98 நாடுகளில் மொத்தமாக 6,532,536,783 அமெரிக்க டாலர் செலவில் 2,673 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை குடியரசில் 17 திட்டங்கள் 14,311,611 அமெரிக்க டொலர்கள் செலவிலான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.