உள்நாடு

“அரச அதிகாரி என்ற வரையறையினை கடந்து மக்களின் தேவை அறிந்து செயலாற்றியவர் அமரர் கேதீஸ்வரன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்..!

மன்னார் மாவட்ட மக்களின் நலனில் இனப்பாகுப்பாடுகளின்றி தமது காலத்தில் செயல்பட்ட ஒரு நல்ல மனிதரை இழந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முசலி பிரேதேச செயலாளர் செ.கேதீஸ்வரனின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறியிருப்பதாவது,
“இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து, மெனிக்பார்ம் நலன்புரி முகாமுக்கு வந்தபோதும், அதன் பிற்பாடான மீள்குடியேற்றத்தின் போதும், இடப்பெயர்வுக்குள்ளாகி புத்தளத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களின் முசலி மீள்குடியேற்றத்திலும் இரவு, பகலாக சோர்வின்றி பணியாற்றியமை, அவரது மனித நேசத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் உயர் குணத்தையும் வெளிக்காட்டியது.
அது மட்டுமல்லாமல், மீள்குடியேறும் மக்களின் காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை என்பன தொடர்பில், பல தரப்புக்கள் பிழையான பார்வையினைக்கொண்டு, எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த போதும் சரியான நிலைப்பாட்டில் நின்று, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுக்காக முன்னின்று செயலாற்றியவராக அமரர் கேதீஸ்வரன் இருந்துள்ளார்.
இவரது துணிவான செற்பாடுகளை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களின் அழுத்தம் காரணமாக, வட மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அமரர் கேதீஸ்வரன், மன உளைச்சலுடனேயே இருந்தார். இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் மன்னார் மாவட்ட மக்களின் நலன் தொடர்பில், எம்முடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிந்தனை கொண்டவராக இருந்ததை, இந்த தருணத்தில் நினைவு கூறுவது எமது பொறுப்பாகும். அவரது காலத்தில், மீள்குடியேற்ற விடயத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பினை இன்றளவும் மறக்க முடியாததொன்றாகவே நான் பார்க்கின்றேன்.
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாகும். அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *