“பாரம்பரியம்” நிகழ்ச்சித் தொடரில் ஆஸாத் மௌலானா நினைவுகள்..!
நாளை 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் “பாரம்பரியம்” நிகழ்ச்சித் தொடரின் நேர் காணலில், முன்னாள் முஸ்லிம் சேவை சிரேஷ்ட தயாரிப்பாளர் மர்ஹூம் ஆஸாத் மௌலானா அவர்களின் நினைவுகள் பரிமாறப்பட இருக்கின்றன.
ஆஸாத் மௌலானா 1970 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தயாரிப்பாளராக இணைந்து கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தும், வெளிக்கள நிகழ்ச்சிகளாக நாட்டில் ஆங்காங்கே நிகழ்வுற்ற சமய, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளோடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள்
பலவற்றையும் ஒலிப்பதிவு செய்து தொகுத்து வழங்கினார்.
சுமார் 18 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். தேசிய ரீதியான பல வெளிநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தனது மொழி, பேச்சாற்றலால், இவர் இலங்கை வானொலியின் அனைத்து சேவையின் மூத்த ஒலிபரப்பாளர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியில், ஆஸாத் மௌலானா அவர்களின் கனிஷ்ட புதல்வர் உளவள ஆலோசகர் மௌலவி செய்யத் ஜெஹான் மௌலானா, ஆஸாத் மௌலானா அவர்களின் சகோதரனின் மகனும் முஸ்லிம் சேவையின் கலைஞரும் விளம்பர நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான செய்யத் ரஸ்மி மௌலானா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து, ஆஸாத் மௌலானா அவர்களின் நினைவுகளை நேயர்களோடு பரிமாறுகிறார்கள்.
“பாரம்பரியம்” நிகழ்ச்சியினை, எம்.எஸ்.எம். ஜின்னாஹ் தொகுத்தளிக்க, முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் எம். ஜே. பாத்திமா ரினூஷியா தயாரித்தளிக்கிறார்.
( ஐ. ஏ. காதிர் கான் )