விளையாட்டு

லங்கா புட்போல் கப் – 2024. பலமிக்க கொழும்பு எப்.சி இடம் போராடித் தோற்றது கிழக்கு அணி.

லங்கா புட்போல் கப் -2024 இன் 3ஆவது காலிறுதிப் போட்டியில் பலமிக்க கொழும்பு எப்.சி அணியிடம் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் போராடித் தோற்றது இளம் வீரர்களை கொண்ட கிழக்கு மாகாண அணி.

லங்கா ஸ்போர்ட்ஸ் குரூப் இலங்கையில் உதைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்தும் முயற்சியில் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து லங்கா லங்கா புட்போல் கப்- 2024 ஐ ஆரம்பித்துள்ளது. இதில் இலங்கை உதைப்பந்தாட்டத்தில் முன்னனி வகிக்கும் கழகங்களும்இ வீரர்களும் பங்கேற்கின்றனர். அதற்கமைய இதில் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதற்கமைய விலகல் முறையில் அமைக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையில் 4 காலிறுதி, இரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்பன இடம்பெறவுள்ளது.

மேலும் இத் தொடரில் யாழ்ப்பானம், கிழக்கு, கண்டி, கொழும்பு எப்.சி, காலி, களுத்துறை, மத்திய மாகாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய 8 அணிகளே பங்கேற்கின்றன. இதற்கு இலங்கையின் புகழ் பெற்ற 8 பயிற்றுவிப்பாளர்கள் ஒவ்வொரு அணியையும் பயிற்றுவிக்கின்றனர். அதற்கமைய ஹசன் ரூமி (கொழும்பு), ரமீஸ் ஹசன் (களுத்துறை), ஈ.பி.சன்னா (காலி), ரத்னம் ஜஸ்மின் (யாழ்ப்பாணம்), ரவ்மே மொஹிதீன் (மத்திய), மொஹமட் மொஹிதீன் (கிழக்கு), அஷ்பக் அஹமட் (கண்டி) மற்றும் சதுர குணரத்ன (நீர்கொழும்பு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்களும்இ 2ஆம் இடம்பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாய்களும் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய கொழும்பு கிட்டி உதைப்பந்தாட்ட மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்ற 3ஆவது காலிறுதிப் போட்டியில் இலஙகை மற்றும் சர்வதேசத்தின் முன்னனி வீரர்களை உள்ளடக்கிய கொழும்பு எப்.சி அணியை கிழக்கின் முன்னனி, இளம் வீரர்களைக் கொண்ட கிழக்கு மாகாண அணி எதிர்த்தாடியது. விறுவிறுப்பாக ஆரம்பித்த ஆட்டத்தின் முதல் பாதியில் பந்து இரு அணிகளின் கோல் கம்பங்களையும் சென்று வந்தது. இருப்பினும் இரு அணிகளினதும் தடுப்பு மற்றும் கோல் காப்பாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் இரு அணிகளாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியவில்லை . இருப்பினும் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் கொழும்பு எப்.சி வீரரின் முறையற்ற பந்துப்பறிப்பால் முதல் சிகப்பு அட்டை வழங்கப்பட 10 பேருடன் ஆட்டத்தை தொடர்ந்தது கொழும்பு எப்.சி. முதல் பாதி எந்த வித கோல்களும் இன்றி சமநிலை பெற்றது.

பின்னர் தொடர்ந்த 2ஆவது தீர்மானமிக்க பாதி ஆட்டத்தில் கிழக்கு வீரர்களின் பந்துப் பரிமாற்றம் சிறப்பாக இருந்த போதிலும் அவர்களால் எதிரனி கம்பத்தினுள் நுழைய முடியவில்லை. தொடர்ந்த ஆட்டத்தில் கொழும்பு எப்.சி இன் முன்கள வீரரான சாகில் பந்தை பல தடவைகள் கம்பம் நோக்கி அடித்த போதிலும் அதனை கிழக்கு அணியின் கோல்காப்பாளரும் தலைவருமான சகீல் அஹமட் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். இருப்பினும் ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் கொழும்பு எப்.சி தனக்குக் கிடைத்த ப்ரீகிக் உதையை உயர்த்திக் கொடுக்க அதை லாபகமாகப் பெற்ற சாகில் கம்பத்தின் இடப்புரத்தினூடாக பந்தை உள்நுழைக்க முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது கொழும்பு எப்.சி அணி.

தொடர்ந்த ஆட்டத்தில் கிழக்கு அணி வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முனைப்புடன் வேகமான ஆட்டத்தை வெளிக் காட்டிய போதிலும் கொழும்பு எப்.சி இன் கோல்காப்பாளரான இம்ரானைத் தாண்டி பந்தை உள்ளனுப்ப சிரமப்பட்டனர். இதனால் முழு நேர ஆட்ட முடிவில் பலமிக்க கொழும்பு எப்.சி அணியிடம் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் போராடித் தோற்ற கிழக்கு அணியின் இளம் வீரர்கள் லங்கா புட்போல் கப் -2024 தொடரிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *