ஆசிய ரக்பி ஆடவர் பிரிவு 1 சம்பியன்ஷிப் தொடர். – கஸகஸ்தானை மண்டியிடவைத்து மகுடம் சூடியது இலங்கை
ஆசிய ரக்பி ஆடவர் பிரிவு 1 சம்பியன்ஷிப் -2024 தொடரின் இறுதிப் போட்டியில் பலமிக்க கஸகஸ்தான் அணியை 45:07 என்ற புள்ளிகள் அடிப்படையில் மிக இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி சம்பியன் பட்டத்தினை வெற்றி கொண்டு அசத்தியது.
இலங்கை , கத்தார், கஸகஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்ற ஆசியா ரக்பி ஆடவர் பிரிவு 1 சம்பியன்ஷிப் தொடரில் இரு அரையிறுதி ஆட்டம் மற்றும் இறுதிப் போட்டி என்ற அடிப்படையில் தொரின் அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய முதல் அரையிறுதிப் போட்டியில் கத்தார் அணி , கஸகஸ்தான் அணியை எதிர்த்து கடந்த 30ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தியது.
மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் அசத்தலான பந்துப் பரிமாற்றத்தை செய்து அசத்திய போதிலும் கஸகஸ்தான் அணி 33:31என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் போட்டிகளை நடாத்தும் இலங்கை அணி , இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் ஆக்ரோஷமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி முதல் பாதியை 21:03 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது. பின்னர் தொடர்ந்த 2ஆவது பாதி ஆட்டத்தில் தம் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திய இலங்கை வீரர்கள் போட்டி முடிவில் 45:10 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கான வரவை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் அரையறுதியில் தோற்ற இரு அணிகளான கத்தார் மற்றும் இந்திய அணிகள் இன்றைய தினம் 3ஆம் இடத்துக்கான போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் 34:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கத்தார் அணி 3ஆம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இப் போட்டியின் பின்னர் பிற்பகல் 6.45 மணிக்கு கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆரம்பித்த இறுதிப் போட்டியில் சமபலமிக்க இரு அணிகளான இலங்கை மற்றும் கஸகஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தை இலங்கை வீரர்கள் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் 5 ட்ரைகளை எதிரணி பக்கத்தில் வைத்த இலங்கை வீரர்கள் முதல் பாதியை 31:00 என கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் தொடர்ந்த 2ஆவது பாதியில் இலங்கை வீரர்கள் 2 ட்ரைகளையும் கஸகஸ்தான் வீரர்கள் ஒரு ட்ரையையும் வைக்க இரண்டாம் பாதி ஆட்டம் விறுவிறுப்பாய் அமைந்தது. இருப்பினும் போட்டியின் முழு நேர ஆட்ட முடிவில் இலங்கை அணி 45:07 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிக மிக இலகு வெற்றியைப் பதிவு செய்து ஆசிய ரக்பி ஆடவர் பிரிவு 1 சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன் மகுடத்தை வெற்றி கொண்டு அசத்தியது.
(அரபாத் பஹர்தீன்)