ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் நகரங்களை அழகுபடுத்தல் கூட்டம்..!
மாகாணசபைகள் மூலம்தான் இனத்தீர்வு கிடைக்கும் என்றால் ஒன்பது மாகாண சபைகள் இல்ல இருபத்தைந்து மாகாணசபைகளை உருவாக்கி அதற்கு பணங்களை ஒதுக்கீடு செய்யுங்கள் ஆனால் மாகாண சபைகள் மாத்திரம் தீர்வாக அமையாது என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் நகரங்களை அழகுபடுத்தல் எனும் திட்டத்தில் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களுக்கான கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இனத்தீர்வு வருகின்ற போது இனத்தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மாணிக்க வேண்டும் மாகாண சபைகள் கிடைத்து விட்டால் இனத்தீர்வு கிடைக்கும் என்றால் மாகாண சபைகளின் எண்ணிக்கையை அதிகரித்தாவது பெற்றுக் கொள்ள முடியும் விடயம் அதுவல்ல அக்கறைப்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து திருக்கோவில்என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது அங்குஇருபது வீதமான தமிழ் சகோதரர்கள் வாழ்ந்தார்கள் அவர்களுக்கு நாற்பது வீதமான காணிகள் பகிர்தளிக்கப்பட்டது ஆனால் அவர்கள் இன்று அப்பிரதேசத்திற்கு முஸ்லீம்கள் வரக்கூடாது என்று சொல்கின்றார்கள் இப்படி இருந்தால் இனத்தீர்வு எப்படி நமது நாட்டில் கிடைக்கும் சிங்களவராக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் முஸ்லீமாக இருந்தாலும் நாம் ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் வாழாத மட்டும் நமக்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலக பிரதேச செயலக பிரதி திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பாடசாலை அதிபர்கள், உலமாசபை பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், சுகாதார திணைக்கள அதிகாரிகள், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)