விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் ரி20 தொடர். குசல் மென்டிஸின் சதத்தால் தோற்றுப் போனது எஸ்.எல்.சி. ரெட் அணி.

நேற்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் ரெட் அணிக்கு எதிரான போட்டியில் அணித்தலைவரான குசல் மென்டிஸின் அசத்தல் சதத்தின் உதவியுடன் 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை கிரிக்கெட் யெலோவ் அணி.

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடருக்கான அணி வீரர்களை தெரிவு செய்வதற்கும், அவர்களுக்கான பயிற்சிக்காகவும் இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்துள்ள 3 அணிகள் பங்கேற்கின்ற ரி20 தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது.

அந்தவகையில் இத் தொடரின் முதல் போட்டி நேற்று இரவு 7 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இதில் குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் யெலோவ் மற்றும் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் ரெட் ஆகிய அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் யெலோவ் அணிக்கு ஆரம்ப வீரரான பெத்தும் நிஷங்க 24 ஓட்டங்களைப் பெற்று சுமாரான ஆரம்பத்தைக் கொடுத்தார்.

பின்னர் வந்த செவோன் டேனியல் அணித்தலைவரான குசல் மென்டிஸ் உடன் இணைந்து சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இவ்விருவரும் தத்தமது அரைச்சதங்களை விளாசி தமக்கிடையில் 141 ஓட்டங்களை பகிர்ந்திருக்க 59 ஓட்டங்களுடன் செவோன் டேனியல் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்திலிருந்த குசல் மென்டிஸ் சதம் விளாசி 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை விளாசிக் கொடுக்க யெலோவ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெறறுக் கொண்டது. பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் 226 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த ரெட் அணிக்கு ஆரம்ப வீரர்களான திக்வெல்ல (17) மற்றும் அவிஷ்க (10) ஓட்டங்களையும் பெற்று ஏமாற்றம் கொடுத்தனர். இருப்பினும் 3ஆம் இலக்க வீரராக வந்த கமிந்து மென்டிஸ் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த போதிலும் ரெட் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இதனால் யெலோவ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் வெல்லாலகோ 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

(அரபாத் பஹர்தீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *