உள்நாடு

நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பயணிப்போம்.- மே தின செய்தியில் ஜனாதிபதி அறைகூவல்.

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக ஒன்றிணைந்து உரிய திட்டமிடலுக்கூடாக பணியாற்ற வேண்டும்.

கடந்த பொருளாதார வீழ்ச்சியின் போது இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் தான் அதிகமான சவால்களை எதிர்கொண்டார்கள். எல்லாவற்றிலும் விடாமுயற்சியுடன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யும் அந்த எல்லையற்ற அர்ப்பணிப்பின் பலன்களை நாட்டில் கண்டுகொள்ளலாம். தற்போது இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதுடன் பணவீக்கத்தை கணிசமான அளவிற்கு குறைத்து ரூபாயை பலப்படுத்த முடிந்திருப்பது அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

உழைக்கும் மக்களை தொடர்ந்தும் வறியவர்களாகவே வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. போராட்டமின்றி அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ‘அஸ்வெசும’ மற்றும் ‘உறுமய’ திட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்காக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு இணையாக தனியார் துறையினரும் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளன.

வழமையான மே தினக் கொண்டாட்டத்திற்கு மட்டுப்படுத்தாமல், நவீன போக்குகளையும் சவால்களையும் உணர்ந்து நாட்டை வெற்றிபெறச் செய்வதற்காக மக்கள் சார்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான வாய்ப்பாக இந்த மே தினத்தை எடுத்துக் கொள்வோம் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாட்டை முன்னேற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள உலகத் தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க – ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *