மே மாத இறுதிவரை இந்த வெப்ப நிலைமை நிலவும்..!
நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்திருப்பதையும் அவ்வப்போது மழை பெய்தாலும் இவ்வெப்ப நிலைமை அவ்வாறே நிலவுவதாகவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு , கிழக்கு , தெற்கு மேல் , சப்பிரகமுவ, மத்திய ஆகிய பகுதிகளில் இவ்வெப்பநிலைமையை அறியமுடிகிறது. இந்நிலைமையினால் என்றுமில்லாதவாறு பலர் உஷ்ணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது குறிப்பாக சிறுவர்கள் வயோதிபர்களும் உடலில் தெம்பில்லாத சோர்வு நிலையேற்பட்டு சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையில் சிறுவர்கள் கடைகளில் விற்கப்படும் இனிப்பூட்டிய “ஐஸ் பழம்” போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதுமுண்டு.
வெப்பம் காரணமாக உடலின் தோலில் அடிக்கடி சொறிவேற்படுவதுடன், வேர்க்குரு போன்றனவும் ஏற்பட்டு தோல் சற்று சிவப்பாக மாறும் நிலைமையுமிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகளும் இதனால் வழமையைவிட அடிக்கடி அழுவதுமுண்டு. வெப்ப நிலைமையினால் பல வீடுகளில் இந்நிலைமைக்காக மின்விசிறிகளை(FAN) விடியும்வரை உபயோகிக்கும் நிலைமையையும் காணமுடிகிறது. சிலருக்குக் காய்ச்சல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாத இறுதிவரை இவ்வெப்ப நிலைமை இருக்குமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்திருக்கும் நிலையில் மக்கள் குறிப்பாக சிறுவர்கள் வயோதிபர்கள் வெயிலின்போது வெளியில் அதிக நேரம் நடமாடுவது வேலைகளில் ஈடுபடுவது, குடைகளின்றி செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், இயன்றவரை நிழலில் இருப்பது நல்லது, அத்துடன் அதிகளவில் நீர் அருந்துவது நீர்க்கலந்த பழரசங்களை அடிக்கடி அருந்துவது சிறந்ததாகுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் வித்தியாசமான உடல் உபாதைகள் ஏதும் அறியப்பட்டால் உடன் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று ஏற்ற சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(ஏ.எம்.ஜலீல்)