விமரிசையாக நடைபெற்ற சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு.
கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எழுதிய சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் கவிதை நூலின் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28.04.2024) தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில், பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு ஒன்றியத்தின் பொருளாளர் கவிஞர் தர்கா நகர் ஸபா அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, பே,பி,எ, ஒன்றியத்தின் தலைவரும் தர்ஹா நகர் ரூமீ ஹாசிம் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளருமான றபிஸ் ஹம்ஸா வரவேற்பு பையுடன் வாழ்த்துரை யையும் வழங்கினார் விஸ்டம் சர்வதேச பாடசாலையின் இஸ்தாபகர் எம். எம். எம். பௌஸர் நளீமி வாழ்த்துக் கவிதை வழங்கினார்.
தொடர்ந்து சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் நூலின் முதல் இரு பிரதிகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. பிரதிகளை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்கள் வெளியிட்டுவைக்க, முதற் பிரதியை ரூமி ஹாஷிம் பவுண்டேசன் நிறுவுநர்/தலைவர் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி ரூமி ஹாஷிம் அவர்களும், இரண்டாவது பிரதியை fine cure pharmaceuticals முகாமைத்துவப் பணிப்பாளரும் ரூமி ஹாஷிம் கல்வி நிலையத்தின் செயலாளருமான அல் ஹாஜ் ஜஸூக் அஹமட் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்
கலாநிதி ரூமி ஹாஷிம் அவர்கள் விசேட உரை நிகழ்த்தியதுடன், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அரபாத் கரீம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் இலங்கைத் திறந்த பல்கலைக் கழக வருகைதரு விரிவுரையாளர் திருமதி ஸுமையா ஷரிப்தீன், பஸ்லி ஹமீட் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர்.
பின்னர் கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் உப செயலாளர் திருமதி ஷஹாமா ஸனீர் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. வைபவத்தில் பங்கேற்ற பிரமுகர்களுக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பிராந்தியத்தில் உள்ள நான்கு பாடசாலைகளின் நூலகங்களுக்கு அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களால் ஒரு தொகைப் புத்தகங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நிகழ்ச்சியை மக்கொனையைச் சேர்ந்த செல்வி அஸ்ஹா லாபிர் திறம்பத் தொகுத்து வழங்கினார்.
(பீ.எம். முக்தார்)