உள்நாடு

ஊரையே உலுக்கிய மாணவனின் மரணம்..!

27.04.2024 பகல் பொழுது, மடுள்போவ – கெஹெல்பன்னல கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் குடா ஓயாவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளம் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்த செய்தி ஹெம்மாதகம பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

அல் அஸ்ஹர் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் நிஷான் அஹமத் எனும் 16 வயது மாணவனே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிபோருவ பிரதேசத்தை சேர்ந்த நிஸார் (மாவனல்ல) நூர்ஜஹான் தம்பதியினரின் இளைய மகனான நிஷான் அஹமத் மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் இளையவராவார். கல்வி, ஆன்மீகம், தலைமைத்துவப் பண்பு என்று சிறந்து விளங்கினார். தன்னைவிட சிறியவர்கள் மீது இரக்கமும், மூத்தோர்களின் மீது கண்ணியமும் கொண்டவர். ஒழுக்க விழுமியங்களை பேணி வாழ்வினை துவங்கிய, இவ்விளம் மாணவனின் திறமைகளை கண்ட கல்லூரி, மாணவத் தலைவனாக தேர்ந்தெடுத்திருந்தது. தனது கடமைகளை செவ்வனே செய்து ஆசிரியர் குலாத்தினதும் மாணவர்களினதும் பேரன்பை பெற்றிருந்தமை அவரது மரண வீட்டில் கண்டு கொள்ள முடிந்தது.

தான் பிறந்து வாழ்ந்த ஹெம்மாதகம நகரோடு இணைந்த பகுதியை சேர்ந்த மக்களிடமும், இச்சிறு வயது முதலே நற்பெயரை பெற்றிருந்தார். எப்போதும் புன்னகையுடன் காணப்படுவார். சிறுவர்களுக்கேயுரிய குறும்புகள் செய்தாலும் அடுத்தவர் மனம் புண்படாத, அடுத்தவருக்கு தொல்லையற்றதாகவே இருக்கும். வழமையாகவே அதிகாலை தொழுகையை தவறாது பேணியவர். ரமழான் காலங்களின் அவர் வயதை ஒத்தவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியிலும் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் தன் இரவு வணக்கத்தில் தன்னை அர்பணித்திருந்தார். ஆன்மீகம், கல்வி, விளையாட்டு, குறும்பு என அனைத்திலும் சிறந்து விளங்கினார். தினமும் அவரை அடிக்கடி காணும் வாய்ப்பு எனக்கிருந்தது. இனி எனதும் எமதூர் மக்களினதும் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார். இன்று ஞாயிறு மு.ப 8:30 மணிக்கு அவரது ஜனாஸா திரளான மக்களின் கண்ணீரோடும் பிரார்த்தனைகளுடனும், ஹெம்மாதகம பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்று, ஜனாஸா தொழுகையை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. கிட்டிய ஆண்டுகளில் மிக அதிகளவு மக்கள் கலந்து கொண்ட ஒரு ஜனாஸா நல்லடக்க நிகழ்வு இது என்பதில் சந்தேகமில்லை.

குடா ஓயா என்பது நிஜத்திலும் சிறிய ஆறுதான். என்றாலும்
கமத்தொழிலுக்காக நீர் பெறும் பொருட்டு 1945 ஆம் ஆண்டு குறித்த இடத்தில் சிறிய அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
‘அமுன’ என்றழைக்கப்படும் இந்த இடம் காலா காலமாக மிகவும் ஆழமான ஆபத்தான இடமாகும். அறிவித்தல் பதாகைகள் இடப்பட்டிருந்தாளும், விடுமுறை தினங்களில் மாணவர்கள், இளைஞர்கள் குறித்த இடத்தில் நீராட வருவது சாதாரண விடயமாகவே பார்க்கப்பட்டது. இதற்கு முன்பும் இங்கு சிலர் மூழ்கிய நிலையில் அயலில் வாழும் இளைஞர்களால் காப்பற்றப் பட்டுள்ளமையு தெரிய வருகின்றது. சேறும் சகதியுமாக காணப்படும் குறித்த இடத்தில் இனியும் இவ்வாறான சோகங்கள் நிகழாதிருக்க பிரதேச செயலகம் மற்றும் பொலிஸார் ஆவண செய்வார்களா?

 

(நியாஸ் ஸாலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *