கலைகட்டிய ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் புதுவருட விளையாட்டு போட்டி நிகழ்வு.
கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை (27) தலவில பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதான மேற்பார்வையில் ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் அனுசரனையில்இ தலவில வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் செய்திருந்தன. ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளர் எம்.பி.எம். ரபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம் ஷமில இந்திக்க ஜெயசிங்க கலந்துகொண்டார்.
இப் பாரம்பரிய நிகழ்வில் யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், சாக்கோட்டம், ஊசியில் நூல் கோர்த்தல், தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் வீசிப் பிடித்தல், சந்தேக நபரை தேடுதல், பலூன் நடனம், பனிஸ் தின்னுதல், அழகு ராணிப் போட்டி உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்தன. குறித்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு அதிதிகளால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர் இந்திக்க ரந்தெனிய, கல்பிட்டி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வீரக்கோன், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உதவித் தலைவர் விஜித்த பெர்னாந்து , ஏத்தாளை சமுர்த்தி கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏத்தாளை சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தலவில வடக்கு மற்றும் கிழக்கு சிறுவர் சங்கங்களின் மாணவர்களின் வரவேற்பு நடனங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்