அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக் குழுவினர் ஒமான் நாட்டுக்கு விஜயம்..!
இக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவித் தலைவர்களில் ஒருவரான அஷ் ஷைக் ஏ. எல். எம். கலீல், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ் ஷைக் எஸ். எல். எம். நவ்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒமான் தலைமை முஃப்தி அஷ் ஷைக் அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான ஒமான் நாட்டுத் தூதுவர் அஹ்மத் பின் அலீ அல் ராஷிதி அவர்களின் சுமார் ஆறு மாதங்களின் அயராத முயற்சியின் பயனாக மேற்படி விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது, ஒமான் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி முஹம்மது பின் சயீத் அல்-மஃமரி, காபூல் கலாச்சார மற்றும் அறிவியல் நிலையத்தின் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் ஹபீப் பின் முஹம்மத் அர் ரியாமீ, உதவித் தலைமை முஃப்தி கலாநிதி அஷ் ஷைக் கஹ்லான் பின் நப்ஹான் அல் கரூஸி, ஃபத்வாப் பிரிவின் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் அஹ்மத் பின் ஸுஊத் அல் ஸியாபி, முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் கலாநிதி அஷ் ஷைக் அப்துல்லாஹ் பின் ராஷித் அல் ஸியாபி ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்தது.
எதிர்காலத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் சமய, சமூக, கல்வி மேம்பாட்டு திட்டங்களுக்குத் தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக கருத்துப்பரிமாறப்பட்டதுடன், பரஸ்பர புரிந்துணர்வுத் திட்டங்களில் இரு தரப்பு அனுபவங்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியடப்பட்ட தமிழ், சிங்கள அல் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டது.
இவ்விஷேட கலந்துரையாடல்களிலும் தலைமை முஃப்தி அவர்களது விருந்துபசாரத்திலும் இலங்கைக்கான தூதுவரும் கலந்துகொண்டார்.