மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோம்.. -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.24)
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்த தீர்மானித்தோம். மே முதலாந் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும். உலகம் பூராவிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்களை, இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காதகவும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மே தினம் உருவாகின்ற தருணத்தில் உலகம் பூராவிலுமுள்ள உழைக்கும் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி இருந்தார்கள். நிகழ்கால உலகில் ஏகாதிபத்தியம் சிதைவடைந்ததன் காரணமாக உலகம் பூராவிலும் உள்ள மக்கள்மீது பாரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதைப்போலவே உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் கத்தரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் உயிர்வாழ முடியாத நிலையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அதைப்போலவே யுத்த தீச்சுவாலைகள் பற்றியெரிகின்றன.
இன்றளவில் இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய ஒரு நாடாகும். செலுத்தித் தீர்க்க முடியாத கடன் சுமை ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. செலுத்த முடியாத வரிச்சுமை மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. ஊழல் – மோசடி, பொதுப்பணத்தை விரயமாக்குதல், அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றப்படுதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வரலாற்றுக் காலந்தோட்டே மக்கள் வென்றெடுத்த உரிமைகள் தற்போது கத்தரிக்கப்பட்டு வருகின்றன. உலகம் பூராவிலும் போன்றே எமது நாட்டு மக்களும் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். 1886 இல் ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் உழைக்கும் மக்கள் ஏறக்குறைய 12 – 15 மணித்தியாலங்கள் வரையான சேவைக்காலத்திற்குப் பதிலாக எட்டு மணித்தியாலங்களைக்கொண்ட வேலைநாளைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போதைய ஆட்சியாளர்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை அடக்கினார்கள். ஒருசில தொழிலாளர் தலைவர்கள் தமது உயிர்களை இழக்கவேண்டிய நிலையேற்பட்டது. ஆயினும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது. மேற்படி போராட்டத்தின் ஞாபகார்த்தமாக மே முதலாந் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனஞ் செய்து நடாத்தி வருகிறார்கள். 1886 இல் எட்டு மணித்தியால வேலைநாளை வென்றெடுப்பதற்காகவே போராட்டம் நடாத்தப்பட்டது. எனினும் தற்போது நவலிபரல்வாத செயற்பாடுகளின் மத்தியில் வென்றெடுத்த எட்டு மணித்தியால வேலைநாள் அபகரிக்கப்பட்டுள்ளது. பெண்களைக்கூட எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வேலைசெய்வதன் மூலமாகக்கூட உயிர்வாழ போதுமான சம்பளம் கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளது.
இந்த காலகட்டமானது மக்களால் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய காலகட்டமல்ல. உழைக்கும் மக்களுக்கு நாங்கள் கூறுவது இந்த ஆட்சியாளர்களிடம் உரிமைகளைக் கோருவதில் அர்த்தமில்லை. அவர்கள் உரிமைளை வழங்கத் தயாரில்லை. தோன்றியுள்ள நிலைமைகளின்கீழ் உரிமைகளை வழங்க இயலாது. இந்த கொடிய ஆட்சியை தோற்கடித்து அனைவருக்கும் நியாயத்தை நிலைநாட்டக்கூடிய நீதியான சமூகமொன்றை உருவாக்குவதுதான் எமது நாட்டின் முற்போக்கான மக்களுக்கு, இடதுசாரி மக்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு மாற்றுவழி. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் “நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு – மக்கள் சக்தி ஓரணியில்” எனும் தொனிப்பொருளைக் கொண்டதாக மே தினத்தை நடாத்த வேண்டுமென நாங்கள் தீர்மானித்தோம். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்ட பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது மே தினம் இதுவாகும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ள ஒரு தருணத்திலேயே இந்த மே தினம் நடாத்தப்படுகின்றது. இந்த மே தினம் ஜனாதிபதி தேர்தலுக்கு வலிமை சேர்க்கின்ற பிரமாண்டமான பாய்ச்சலாக அமையுமென நாங்கள் நம்புகிறோம். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியை திசைகாட்டியை சுற்றி ஒன்றுசேர்ப்பதுதான் எமது நோக்கம். அதற்காக பெருந்திரளான மக்களை இணைத்துக்கொண்டு மே தினத்தை நடாத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்தில் உருவாக்குகின்ற பிரமாண்டமான பலத்தைப் பயன்படுத்தி, இந்த நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த கொடிய ஆட்சியை தோல்வியுறச் செய்வித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதற்கான சக்தியை அணிதிரட்டுவதே எமது நோக்கமாகும்.
பெருந்தொகையான மக்களை கொழும்பிற்கு ஒன்றுதிரட்டுவது சிரமமானதென்பதால் பெருமளவிலான மக்களை தொடர்புபடுத்திக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு நாங்கள் நான்கு இடங்களில் மே தினத்தை கொண்டாடுகிறோம். யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, மாத்தறை ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நான்கு மே தினக் கொண்டாட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை முதலாந் திகதி காலைப்பொழுதிலும் ஏனைய மே தினக் கூட்டங்களை மாலைப்பொழுதிலும் நடாத்தக் கருதியுள்ளோம்.
நிலவுகின்ற இந்த கொடிய ஆட்சியை முடிவுறுத்துவதற்காக மக்களை அணிதிரட்டுவதே எமது தொனிப்பொருளாக அமைகின்றது. இன்றளவில் எமது நாட்டின் ஒவ்வோர் இனக்குழுவும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிர்வாழ்வது மிகவும் சிரமமானதாக மாறிவிட்டது. உழைக்கும் மக்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்காததைப்போன்றே வரிச்சுமை அதிகரிப்பதும் பொருட்களின் விலையேற்றமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கல்வி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதைப்போன்றே பிள்கைளுக்கு கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. தனியார் கல்விக்கான விலைமட்டங்கள் அதிகரித்துள்ளன. பிள்ளைகளுக்கு கல்விபுகட்டுவது பெற்றோர்களுக்கு சுமையாக மாறிவிட்டது. மறுபுறத்தில் சுகாதாரத் துறையின் சீரழிவு காரணமாக நோயாளிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். பொதுவில் சமூகக் கட்டமைப்புகள் சீரழிந்து அராஜகநிலையுற்று சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலைமை தோன்றியுள்ளது. சிறுவர்களைப்போன்றே பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது. இந்த சமூகம் மனிதர்களுக்கு மனிதர்களாக வாழமுடியாத நிலைமை உருவாகி இருக்கின்றது. இவ்வாறான நிலைமையைத் தாங்கிக்கொண்டு இத்தகைய சமூகமொன்று நிலவ இடமளிக்க நெறிமுறைசார்ந்த மக்களுக்கு உரிமை கிடையாது.
எமது நாட்டின் உழைக்கும் மக்கள், தொழில்வாண்மையாளர்கள், முற்போக்குச் சக்திகள் இந்த அனைவருக்குமே தெரிவுசெய்ய இருப்பது ஒரேயொரு மாற்றுவழிதான். எமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த ஆட்சியை மாற்றியமைத்து புதிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். நாங்கள் செய்யவேண்டியது ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவது மாத்திரமல்ல: நிலவுகின்ற இந்த சமூகத்தில் ஆழமான மாற்றமொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த கடன்வாங்கித் தின்கின்ற, விற்றுத் தின்கின்ற பொருளாதாரத்திற்குப் பதிலாக உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட பலம்பொருந்திய, உறுதியான பொருளாதாரமொன்றை உருவாக்க வேண்டும். எம்மிடம் தேசிய மறுமலர்ச்சியொன்றின் செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. அதற்காக மக்களை ஒருங்கிணைக்கின்ற மற்றும் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அனைத்தையும் ஒன்றிணைத்த மக்கள் புலனுணர்வுமிக்கவர்களாக பங்களிக்கின்ற வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகி உள்ளது. அதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற, பிரமாண்டமான அடியெடுப்பினை வைக்கின்ற தருணமாக மே தினத்தை மாற்றிக்கொள்வோம். அதற்காக 2024 மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினத்தை தேசிய மக்கள் சக்தி என்றவகையில் விரிவான தொனிப்பொருளின் ஊடாக பொதுமக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களை அணிதிரட்டுகின்ற தினமாக மாற்றிக்கொள்வோம். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த சமூகத்தை மாற்றியமைக்கின்ற தீர்மானத்தை மேற்கொள்வோமென உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், தொழில்வாண்மையாளர்கள், மீனவர்கள், பெண்கள், இளைஞர் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
எமது நாட்டின் தொழிலாளர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்களும் தொழிலாளர் உரிமைகளைப் பறித்தெடுப்பவர்களும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பினைக்கோரி புரிகின்ற ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்துபவர்களும் உழைக்கும் மக்களை அடக்கியாள்பவர்களும் இந்த மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அது நகைப்பிற்குரிய விடயமாகும். திரிபுநிலையாகும். மேதினத்தின் தூய்மையைக் கெடுப்பதற்காக மேற்கொள்கின்ற அத்தகைய முயற்சிகளை தோற்கடித்திட இடையீடு செய்யுமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உழைக்கும் மக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கே மே தினத்திற்கான உரிமை உண்டு. மக்களின் உரிமைகளைக் கொடுக்காத மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்த ஆட்சியைக் கவிழ்த்து மக்களாட்சியை உருவாக்குவதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற மே தினமாக இந்த மே தினத்தை மாற்றிக்கொள்வோமென உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட ஒட்டுமொத்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.