9ஆவது உலகக்கிண்ணத்தின் தூதுவராக மின்னல் மனிதன் போல்ட்.
உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஐசிசி இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 9ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகில் மிக வேகமாக ஓடக்கூடிய நபரான ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உலகக் கிண்ணத்துக்கான தூதராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார். போல்ட் எட்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 அஞ்சலோட்டம் என மெய்வல்லுனர் போட்டிகளில் உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட உசைன் போல்ட், ”ஐசிசி இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உற்சாகமடைகிறேன். மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. கிரிக்கெட் எப்போதும் எனது மனதில் விஷேடமான இடத்தில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் போட்டிகளில் இணைந்துக்கொண்டு கிரிக்கெட்டை சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கு எண்ணுகிறேன்.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)