காஸா நிதியத்துக்கு சீனன்கோட்டை மக்களின் பூரண ஒத்துழைப்பு. – பெருமளவு நிதி சேகரிக்க முடிவு. – சிறுவர்களும் களத்தில் .
பலஸ்தீன் காஸா சிறார்களுக்கான நிதி சேகரிக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு பேருவளை சீனன்கோட்டை மக்களினதும் பூரண பங்களிப்பினை பெற்றுக் கொடுக்க சீனன்கோட்டை பள்ளிச் சங்கம் முடிவு செய்துள்ளது.
சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து பாரிய நிதித் தொகையை சேகரித்து வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதுடன் நிதி சேகரிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழுவொன்றையும் பள்ளிச் சங்கம் நியமித்துள்ளதாக பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார் தெரிவித்தார்.
பள்ளிச் சங்க தலைவரும் ஜாமியா நளீமிய்யா கலாபீட உப தலைவருமான ஏ.எச்.எம்.முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின் கீழ் நிதி சேகரிப்பதற்காக அல் – ஹாஜ் யுஸ்ரி உவைஸ்,அல்-ஹாஜ் பஸ்லி மர்ஸூக், அல் -ஹாஜ் மிஷ்கர் முனவ்வர், அல் -ஹாஜ் அஸ்ஜத் பவ்ஸ், அஷ்கர் அலி முபாரக், அல் -ஹாஜ் சிராஸ் ஹனபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேலை சீனன் கோட்டை பெரேரா வீதி மற்றும் நவ்பல் ஜாபிர் மாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் சிறார் குழுவொன்று 20/4/2024 காலை முதல் பிற்பகல் வரை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று காஸா சிறார்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
புனித ரமழான் பெருநாள் தினத்தில் தனக்கு அன்பளிப்பாக கிடைத்த நிதியை சிறார்கள் தியாக உணர்வோடு இந்த நிதி சேகரித்த சிறார்களிடம் ஒப்படைத்தனர்.பிரதேச வாழ் மக்கள் மிக உற்சாகத்தோடு தம்மால் முடிந்த நிதியை ஒப்படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த சிறுவர் குழுவினரால் சேகரிக்கப்படும் நிதித் தொகை சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வுள்ளது.
இந்த சிறுவர்களின் துணிச்சல் மிகு செயலை அனைவரும் பாராட்டியதோடு பிரதேச சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மிக ஆர்வத்துடன் நிதி உதவி வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.
சீனன்கோட்டை வாழ் மக்கள் சுனாமி,வெள்ளம், மண்சரிவு,சூராவழி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போதும் கொரோனா நோய் மற்றும் வன் செயலினால் பாதிக்கப்பட்டோருக்கும் அவ்வப்போது இன,மத,மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் உதவி செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன காஸா சிறார்களுக்காக அரசாங்கம் தொடங்கியுள்ள நிதி சேகரிப்பு திட்டத்திற்கும் சீனன் கோட்டை மக்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக் கொடுக்க பள்ளிச் சங்கம் முன்வந்துள்ளது.
பெரேரா வீதி மற்றும் நௌபர் ஜாபிர் மாவத்தையைச் சேர்ந்த சிறுவர் குழுவினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)