இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.
இந்த வற் வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக வற் வரி செலுத்த நேரிடும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.