அம்பேவல பால் பண்ணைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்.
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது வழங்கப்பட்ட பணிப்புரைகளின்படி, கடந்த ஆண்டு பண்ணையில் விரிவான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று முற்பகல் அம்பேவெல பால் பண்ணைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பால் பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார மற்றும் அதன் பணியாளர்கள் வரவேற்றனர். பண்ணையின் புதிய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஜனாதிபதி, கறவை மாடுகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் பார்வையிட்டார்.
அதன் பின்னர், ஊழியர்களுடன் சிறு உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள படிப்படியான வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பையும் பாராட்டினார். அதேபோன்று, பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அந்த அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விசேட அதிதிகள் புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பு ஒன்றையும் எழுதியதோடு, பண்ணை ஊழியர்களுடன் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டார். மேலும், வார இறுதி நாட்களில் பண்ணையை பார்வையிட வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்ததுடன், அவர்களின் விபரங்களை கேட்டறிந்து சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
1940 காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அம்பேவெல பண்ணை, 2001 ஆம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டதுடன், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான நவீனமயமாக்கல் காரணமாக, அது தற்போது இலங்கை மற்றும் தெற்காசியாவில் பால் உற்பத்தி மற்றும் பண்ணை தொழில்நுட்பத்தின் அதியுயர் தொழில்நுட்ப பாவனையுடன் கூடிய பிரதான மையமாக மாறியுள்ளதாக அம்பேவெல பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலிருந்து இந்தப் பண்ணையின் அபிவிருத்திக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய அவர், தொடர்ந்தும் பண்ணையின் செயற்பாடுகளைப் பார்வையிட வருகை தருவதையிட்டு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
2022 டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதி பண்ணைக்குச் சென்றபோது, அதன் தினசரி பால் உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 40,000 லிட்டராக இருந்ததுடன், பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இவ்வருடம் நாளாந்தம் 52,000 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இது 30% அதிகரிப்பாகும் எனவும் சரத் பண்டார மேலும் தெரிவித்தார். பால் உற்பத்தித் திறனை படிப்படியாக அதிகரித்து ஆண்டுக்கு 20 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்ய பண்ணை குழு செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கறவை மாடுகளில் உயர்தர வகைகளை இந் நாட்டிலேயே உருவாக்க அம்பேவெல குழுமம் தற்போது செயற்பட்டுள்ளதுடன், அந்த கறவை மாடுகளை பராமரித்தல், தேவையான உணவு நீராகாரம் வழங்குதல், எடையிடுதல், நோய் நிலைகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றை கண்டறியும்போதே மாடுகளை பிரித்துவிடுதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் தானியங்கி முறையில் இயந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன.
கடந்த விஜயத்தின்போது ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுப் பணிகள் மற்றும் அனுபவத்திற்காக இந்தப் பண்ணை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மாதிரி பண்ணையாக மற்றுமொரு பண்ணை பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட எவரும் அங்கு வருகை தந்து மாதிரிப் பண்ணை அனுபவத்தைப் பெற முடியும் எனவும் சரத் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுள்ளதாகவும், அம்பேவெல பால் பண்ணைக்கு நாளாந்தம் அதிகளவான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் சுட்டிக்காட்டிய சரத் பண்டார, பல வருடங்களின் பின்னர் ஒரே நாளில் அதிகளவான 9,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் ஒரே நாளில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்ணைக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இவ்வருடம் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பண்டார மேலும் தெரிவித்தார்.