உள்நாடு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உப தலைவரின் உடல் கள்ளியங்காட்டில் தகனக்கிரியை..!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  உப தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான  கந்தையா  யோகவேளின் உடல் செவ்வாய்க்கிழமை 16.04.2024 மாலை மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சிக் கொடி போர்த்தப்பட்ட பின் சடலம் இரங்கலுரையின் நிகழ்வுகளின் பின்னர் அன்னாரது வாவிக்கரை வீதி 2 இல் இருந்து கள்ளியங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

70 வயதைத் தாண்டிய யோகவேள் கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மரணமடைந்திருந்தார்.

இறுதிக் கிரியை நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் ஆப்ரஹாம் ஜோர்ஜ் பிள்ளை. மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் தீபன் ராஜன், காந்தி சேவா சங்கத் தலைவர் கதிர் பாரதிதாஸன்,  ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இரங்கலுரையாற்றினர்.

அங்கு அனுதாப உரையாற்றிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),

“நம்மைவிட்டுப் பிரிந்த அமரர் யோகவேள் அவர்கள்,  பிரபல்யம் இல்லாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் பல அளப்பரிய சேவைகளைச் செய்திருக்கிறார். நெருக்கடியான கால கட்டங்களிலே முன்னின்று         சேவை செய்தவர் அவர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறையிலே புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் பல முயற்சிகளை எடுத்தவர்” என்றார்.

இறுதிக் கிரியை நிகழ்வுகளில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள், மகளிர் அணியினர், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் சித்திரப்போடி மாமாங்கராஜா உட்பட இன்னும் ஊர்ப் பிரமுகர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்   உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *