இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் நான்கு பேர் கைது ..!
இலங்கைக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மண்டபம் தென் கடல் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கடலில் ரெபிஸ்டன் என்பவர் ஓட்டி வந்த நாட்டுப்படகை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர்.
இதையடுத்து சோதனை செய்த போது, அதில் 111 பாக்கெட்களில் ரூ. 108 கோடி மதிப்பில் 99 கிலோ கஞ்சா ஆயில் இருந்தது தெரியவந்தது. போதைப்பொருளை பறிமுதல் செய்து படகில் இருந்த ரெபிஸ்டன் உட்பட இருவரை கடலோர காவல் படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களின் தகவல் படி மண்டபம் தென் மீன்பிடி துறைமுகம் அருகே படகை மடக்கி பிடிக்க முயன்ற போது கடலில் பண்டலை வீசியதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பாம்பனை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உளவு பிரிவு போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.