மாத்தளையில் தேசிய வெசாக் தினமாக கொண்டாடப்படும் இவ்வருட வெசாக் தினம்..!
அரசாங்கம் இவ்வருட வெசாக் தினத்தை தேசிய வெசாக் தினமாக மாத்தளையை மத்தியமாகக் கொண்டு அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது
எதிர்வரும் மே 21 முதல் 27 வரை நடைபெறவுள்ள இவ்வெசாக் தினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலாசார இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உட்பட முக்கிய அமைச்சர்கள் மாத்தளைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்குள்ள முக்கிய பெளத்த விகாரைகளில் பெளத்த சமய நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வெசாக் தினத்தையொட்டி அன்றைய தினங்களில் அதனை சிறப்பிக்கும் வகையிலும் ஒத்துழைப்பினை நல்கும் வகையிலும் இன நல்லுறவை வளர்க்கும் வகையிலும் முஸ்லிம் சமூக கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாத்தளையில் சில நிகழ்ச்சிகளை நடாத்துவதுபற்றிய கலந்துரையாடலொன்று மாத்தளை கொங்காவல ஜும்ஆ மஸ்ஜிதில் சமீபத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மாத்தளை மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.அசார் , எம்.ரஹ்மதுல்லாஹ் ஆகியோரது ஆலோசனைக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்ட இக்கலந்துரையாடலின்போது மாத்தளை மாவட்ட மஸ்ஜித் சம்மேளன தலைவர் தேசபந்து ஹாஜி எம்.முஹ்தார் தலைமையிலான அதன் முக்கிய பிரமுகர்கள் மஸ்ஜித் நிர்வாகிகளுடன் காலாசார திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவருடன் ஏனைய உறுப்பினர்கள் கந்துகொண்டு பின்வரும் பணிகளை நடைமுறைப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டதாக சம்மேளனத் தலைவர் தேசபந்து ஹாஜி எம், முஹ்த்தார் தெரிவித்தார்.
அத்தினங்களில் மேற்கொள்ளவுள்ள பணிகளாவன;
கொங்காவல ஜும்ஆ மஸ்ஜிதில் இரத்ததான முகாம் , உக்குவளை பரகஹவெல சபீலுஸ் ஸலாம் அரபு பாடசாலை வளாகத்திலும் மற்றும் வரக்காமுற ஜும்ஆ மஸ்ஜித் காணியிலும் மரநடுகைகள் , மாத்தளை ரஹீமிய்யா மஸ்ஜித் மையவாடி சிரமதானம், அஹதிய்யா ஆசிரியர்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளல் , மூவினங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், மற்றும் நன்கொடை உதவிகள் வழங்கல் , சிரமதான பணிகளுடன் இன நல்லுறவுக்கான உதவிப் பணிகள் தானசாலைகள் மேற்கொள்ளல் ஆகியனவாகும்.
(ஏ.எம்.ஜலீல்)