பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியத்தினால் (PCIPD) இணைந்து வழங்கப்படுகின்ற கூற்று..!
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியம் (PCIPD) என்ற வகையில், 2024 ஏப்ரல் 5 ஆம் திகதி செத்சிறிபாயவில் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவர் உரையாற்றச் சென்று பின்னர் செத்சிறிபாய வளாகத்திலிருந்து வெளியேறுவதற்கான போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததோடு குறித்த வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கான சேவைகள் மற்றும் வாகன அணுகலானது பிரத்தியேகமாக அதி முக்கிய நபர்களுக்கு (VIP Customers) மட்டுமே உரித்தானது எனவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயன்படுத்திய மொழிப் பிரயோகமானது மிகவும் கூருணர்வற்றது, அவமரியாதை ஏற்படுத்தும் மற்றும் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்ற விடயமானது எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த மாற்றுத்திறனாளிப் பெண் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளை உள்வாங்குவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செயலமர்வில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட பேச்சாளராக இருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 9% வீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகளாகக் காணப்படுவதோடு, அத்தகைய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அணுகும்போதும், தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், தங்களது சமூக செயற்பாடுகளில் பங்கேற்கும் போதும் பல்வேறு துறைகளில் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சைகை மொழி விளக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நட்புறவுடன் கூடிய கல்விமுறை, வேலைவாய்ப்பு வசதிகள் மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து போன்ற அவசியமான ஏற்பாடுகள் காணப்படாததால் மாற்றுத்திறன்களை கொண்டுள்ளவர்கள் அடிக்கடி சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான சாசனத்தை (UNCRPD) இலங்கை அங்கீகரித்துள்ளது, அதாவது “அனைத்துவிதமான மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை முழுமையாகவும் சமமாகவும் மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறன்களோடு வாழ்கின்ற மனிதர்கள்) அனுபவிப்பதை ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் உறுதி செய்வதற்கான பொறுப்பு மற்றும் அத்தகைய மாற்றுத்திறனாளிகளின் உள்ளார்ந்த கண்ணியத்திற்கான மரியாதையை மேம்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. கடைகள், பொது உணவகங்கள் அல்லது ஓய்வகங்கள், பொதுப் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பொது மத வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்கான சமமான அணுகலை தனது சாதி, மதம், மொழி, இனம், பால் அல்லது மாற்றுத்திறன் போன்ற எந்த வகையான பாகுபாடுகளும் இன்றி அணுகுவதற்கான உரிமையை இலங்கையின் அரசியலமைப்பின் உறுப்புரை 12(3) உத்தரவாதமளிக்கின்றது. ஆகவே, இலங்கை அரசாங்கமானது மாற்றுத்திறனாளிகள் பொதுக் கட்டடங்களை வசதியாக அணுகுவதனை உறுதிசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள், பிள்ளைகள் அல்லது மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக சட்டம், துணைச் சட்டம் அல்லது நிர்வாக நடவடிக்கை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என அரசியலமைப்பின் உறுப்புரை 12(4) ஆனது மேலும் குறிப்பிடுகின்றது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான தனது வாக்குறுதிகளை இலங்கை நாடானது நிலைநிறுத்தி, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யப் பாடுபட வேண்டும். இந்தச் சம்பவமானது பல அடையாளங்கள் காரணமாக நபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் தடைகளின் ஒன்றோடொன்று தொடர்புடைய தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இங்கு குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட தனி நபர் ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணாக காணப்படுவதோடு குறித்த பெண் அன்றாடம் பல சவால்களுக்கு ஆளாக நேரிடும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே, இவ்வாறான சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு குறித்த மாற்றுத்திறனாளிகளுக்கு காணப்படுகின்ற சுமைகளைக் குறைக்கப் பாடுபடுவது அரசாங்கத்தின் கடமையாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம், கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான அலுவலகம் மற்றும் பல அரச சேவைகளை மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்தும் அணுகுகின்றனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச அலுவலகங்களுக்கான பாதுகாப்புச் சேவைகளானது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) முதன்மைப் பொறுப்பாக இருப்பதால், அத்தகைய அலுவலகங்களில் பணிபுரிகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எல்லோரையும் உள்ளடக்கி செயற்படுவதற்கான பயிற்சி மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சேவைகளை அணுகும் போது அத்தகையவர்களை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கான கூருணர்வுடன் கூடிய மொழிப்பிரயோகம் தொடர்பாக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) வலியுறுத்துகிறோம்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வது இலங்கைப் பிரஜைகளாகிய எமது பொறுப்பாகும். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் (WPC) மற்றும் பாராளுமன்றத்தின் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் பற்றிய ஒன்றியம் (PCIPD) என்ற வகையில், செத்சிறிபாய (மற்றும் பிற பொது இடங்கள்) உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து உரிய முறையில் விழிப்புணர்வோடு காணப்பட வேண்டும் என்பதை நாங்கள் வன்மையாக வலியுறுத்துகிறோம். மேலும், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து அரச உத்தியோகத்தர்கள் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகளை நடத்தும்போது தேவையான ஏற்பாடுகளை முன்னறிவித்துச் செயற்படுமாறும் நாங்கள் குறிப்பாக கேட்டுக்கொள்கிறோம்.