தென்னாபிரிக்காவை துவம்ஷம் செய்த சமரி அத்தபத்து. மகளிர் ஒருநாள் அரங்கில் சாதனை வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை.
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணியின் தலைவியாக சமரி அத்தபத்துவின் சாதனைத் துடுப்பாட்டத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வெற்றியைப் பதிவு செய்த இலங்கை மகளிர் அணி தொடரை 1:1 என சமன் செய்தது.
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாபிரிக்க சென்றுள்ள இலங்கை மகளிர் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2:1 என கைப்பற்றியிருந்தது. பின்னர் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழையால் கழுவப்பட, 2ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.இந்நிலையில் 3ஆவதும் இறுதியுமான போட்டி நேற்று (17) பெச்சப்ஸ்ரூம் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய டுதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையும் அணித்தலைவியுமான லவுரா வொல்வார்ட் ஆட்டமிழக்காமல் இலங்கை பந்துவீச்சாளர்களை வெலுத்துக் கட்டி 184 ஓட்டங்களை விளாச தென்னாபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் சவால்மிக்க 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களம் நுழைந்த இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்ப வீராங்கனைகளான அணித்தலைவி சமரி அத்தபத்து மற்றும் விஷ்மி குணரத்ன ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தினைக் கொடுத்தனர். விஷ்மி 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் விரைவாக வெளியேற 124 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் கண்டது. இருப்பினும் அரைச்சதம் கடந்து களத்திலிருந்த சமரி அத்தபத்துவுடன் 5 ஆவது விக்கெட்டில் இணைந்தார் நிலக்ஷிகா சில்வா.
இந்த ஜோடி தென்னாபிரிக்க பந்துவீச்சை துவம்ஷம் செய்தது. நிலைத்து நின்று பந்துகளை பௌண்ரிகளுக்கு விரட்டிய சமரி அத்தபத்து சதம் கடந்து அசத்தினார். இந்த இருவரும் பிரிக்கப்படாத 181 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டத்தை பதிலளித்து பெற்று வெற்றியடைந்த அணி என்ற சாதனையை பதிவு செய்து தொடரையும் 1:1 என சமன்செய்து அசத்தியது. இறுதிவரை களத்திலிருந்த சமரி அத்தபத்து 195 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
(அரபாத் பஹர்தீன்)