அதிக விலை என தெரிவித்த வெளிநாட்டவரை விரட்டிய கடை உரிமையாளர் கைது – சமூக ஊடக வீடியோ தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை – இன்று புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்
உணவொன்றின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை மிரட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, புதுக்கடை பிரதேசத்தில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர் சாப்பாட்டின் விலையை கேட்ட பின் அது அதிகம் எனும் தோரணையில் செயற்பட்டதைத் தொடர்ந்து, உணவை வாங்கவில்லையாயின் அங்கிருந்து வெளியேறுமாறு, கடையின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர், குறித்த வெளிநாட்டவரை பயமுறுத்தும் வகையில் மிரட்டியதாக தெரிவித்தமை தொடர்பில் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த யூடியுபர் (YouTuber) வெளியிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வந்தமைக்கு அமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், புதுக்கடை பகுதியில் Street Food என்ற பெயரில் உணவு விற்பனை செய்யும் உணவகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடியோ தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு, கடையின் உரிமையாளரான அடையாளம் காட்டிக் கொண்ட நபரை நேற்று (16) வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 51 வயதான கொழும்பு 12 பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (17) புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.