மூன்று தசாப்தங்களின் பின் மீண்டும் லிண்டன் ஜயசேகர சுற்றுப்போட்டி..!
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்கொனை, இந்திரக்கரை ‘இந்திரிலியன்ஸ் கிரிக்கெட் கிளப்’ விளையாட்டுக் கழகத்திற்கும், அதன் பக்கத்துக் கிராமமான மஹகல்கந்தை சகோதர இன ‘சிங்ஹ விளையாட்டுக் கழகத்திற்கும்’ இடையில், மறைந்த ‘லின்டன் ஜயசேகர’ என்பவரின் நினைவாக, அவர்களது புதல்வர்களால் 1983 ஆம் ஆண்டு ‘லின்டன் ஜயசேகர சவால் கிண்ணம்’ என்று கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று தமிழ்; சிங்கள புதுவருடத்தை ஒட்டி முயீன் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் அல் அமீன் அவர்களின் தலைமையில் இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டு தொடர்ந்து சில வருடங்கள் நடைபெற்றன. என்றாலும், நாட்டில் ஏற்பட்ட சில இனமுறுகல்களினாலும், அசாதாரண சூழ்நிலைகளினாலும் இவ் விளையாட்டுப் போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதனால், மீண்டும் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இரு சாராரும் கலந்தாலோசித்து, சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (15/04/2024) அன்று, மீண்டும் இப்போட்டி நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன முன்னாள் தலைவர் அல்ஹாஜ் ஏ.எஸ்.எம் பெளஸி அவர்கள் விளக்கேற்றி சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
அனேகமான விளையாட்டு வீரர்கள் வயதில் ஐம்பதைத் தாண்டினாலும், மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினர்.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றாலும், இயற்கை ஏற்படுத்திய அசாதாரண காலநிலையால் போட்டி இடைநடுவில் நிறுத்தப்பட்டு, வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
(படங்கள்: பீ.எம். முக்தார்)