மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டது நிரந்தர தடையுத்தரவு அல்ல.. -தயாஸிரி ஜயசேகர
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்க இடமளிக்கப்பட மாட்டாது என சு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 18ஆம் திகதி வரை மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளவர்கள் அதனை நிரந்தர தடையுத்தரவு என எண்ணிக் கொண்டு செயற்படுகின்றனர்.
அமைச்சுப்பதவியில் உள்ள மோகத்தினால், தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அதன் காரணமாகவே தற்போது கட்சி யாப்பை மாற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
அதுமாத்திரமின்றி யாப்பிற்கு முரணாக அரசியல் குழு கூட்டத்தையும் கூட்டி பதில் தலைவரையும் தெரிவு செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் செயலாளர் அறிவித்திருக்கின்றார். எனவே சட்ட ரீதியாக நாம் அவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.