உள்நாடு

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ‘முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல்’ என்பன, ‘அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்’ என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளிலும் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்காக, நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், ‘இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம். நுகர்வோருக்குக் கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே
, எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆனால், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இஇணைந்து, நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

அதன்போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ‘முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்’ என்ற அம்சங்கள், சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக, ‘அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்’ என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு, ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *