இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான்.
இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், காஸா மக்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் இஸ்ரேலிய இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடாவடித்தனங்களுக்கு எதிராக இந்த புனிதமிகு நோன்பு பெருநாள் தினத்திலே இலங்கை முஸ்லிம்கள் இருகரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.
நாம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் எமது உறவுகளுடன் இந்த நோன்புப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே, பாலஸ்தீன் காஸா மக்கள் தங்கள் உறவுகளை இழந்து, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வசிக்க வீடின்றி அல்லல் பட்டுக் கொண்டிருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
தங்கள் உறவுகளை இழந்து அநாதையாக தவித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நாங்கள் எங்களால் ஆன உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். இலங்கை அரசாங்கத்தோடு கைகோர்த்து நாம் இந்த மனிதாபிமான உதவிகளை செய்வதன் ஊடாக அந்த மக்களை ஓரளவுக்கேனும், நாம் துன்ப துயரங்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
இலங்கைத் திருநாட்டில் உள்ள சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான வழியை நாம் அமைத்துக் கொள்ள இப்புனிதமான பெருநாள் தினத்திலே நாம் உறுதி கொள்வோமாக என்றும் குறிப்பிட்டார்.