கட்டுரை

விடை பெறும் புனித ரமழானே, அருள் சுமந்து மீண்டும் வந்துவிடு. – பெருநாள் கட்டுரை

புனித ரமழான் மாதம், நோன்பின் மூலம் சிறந்த பயிற்சிகளையும், பண்பாடுகளையும், பக்குவங்களையும் நமது உள்ளங்களில் பதிய வைத்துவிட்டு, நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறது. உலக வாழ்விலிருந்து நாம் தற்காலிகமாக பிரிந்து விடுவதுதான் நோன்பாகும். அந்த வாழ்வு, மீண்டும் நம்மில் வருவதற்குப் பெயர்தான் பெருநாளாகும். நோன்பு என்பது, வெறுமனே பட்டினி தவத்தின் பெயர் அல்ல. பெருநாள் என்பதும், வெறும் விளையாட்டு வேடிக்கையின் பெயருமல்ல.

நோன்பு இறை நெருக்கத்தை அடைவதற்கான ஒரு முயற்சியாகும். பெருநாளோ, அந்த இறை நெருக்கத்தின் உணர்வுடன் சிறந்த முறையில் புதிய ஆண்டைத் துவங்குவதற்குரிய நன்நாளாகும். ‘செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடின்றி, யாவருமே ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்’ என்பதைக் கட்டாயப்படுத்திய அல்லாஹ், அதேபோன்று ‘அந்தச் செல்வந்தர்களுடன் ஏழைகளும் சமமாக, சகோதரத்துவப் பாசத்துடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும்’ என விரும்புகின்றான். இதற்காகத்தான் இப்பெருநாள் தினத்தில் ‘ஸகாத்துல் பித்ர்’ என்றதோர் சிறப்பான தர்மத்தை இஸ்லாம் நமக்கு விதியாக்கியுள்ளது. இதனாலேயே, இதனை பெருநாள் தொழுகைக்கு முன்னரே நிறைவேற்றுமாறு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் நமக்கு பணித்துள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய ஏவலுக்குக் கட்டுப்பட்டு 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்றுவிட்டு, அடுத்த நாள் பெருநாள் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாடத் தயாராகும்போது, நாம் மட்டும் பெருநாளை சந்தோஷமாகக் கொண்டாடக் கூடாது. ‘எம்மைப் போன்று இருக்கக் கூடிய அடுத்த மனிதனையும் சந்தோஷப்படுத்தக் கூடிய வகையில் எல்லோரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடும் அமைப்பில் தயாராகுமாறு’, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

நோன்புப் பெருநாள் தர்மம், நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழை எளியவர்கள் பெருநாள் தினத்தில் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கங்களின் அடிப்படையிலும் கடமையாக்கப்பட்டுள்ளது. வறிய மக்களின் துயர் துடைக்கும் ‘ஸகாத்துல் பித்ர்’ என்ற கடமையுடன் பெருநாள் துவங்குவதன் காரணமாகவே, ‘பித்ர்’ என்ற வார்த்தையுடன் சேர்ந்து, ‘ஈதுல் பித்ர்’ என்று இப்பெருநாள் அழைக்கப்படுகின்றது.

பெருநாள் தினத்தில் இரவு, பகல் இரண்டு வேளைகளுக்கு, தனக்கும் தனது பராமரிப்பிலுள்ள குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் போதுமான அத்தியாவசிய வாழ்க்கை வசதிகளையுடைய ஒவ்வொரு முஸ்லிமும், இத்தகைய வசதிகள் அற்ற அல்லது வசதிகள் குறைந்த ஏழைகளுக்கு கட்டாயமாகக் கொடுப்பதற்குரிய நன்கொடையே ‘ஸகாத்துல் பித்ர்’ எனப்படும்.
நாம் மட்டும் பெருநாளைக் கொண்டாட, அயல் வீட்டார் பெருநாளைக் கொண்டாட வசதியற்றவராக இருப்பாரேயானால், நாம் கொண்டாடும் பெருநாளில் நற் கைங்கரியங்கள் எதுவும் ஏற்படமாட்டாது என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அத்துடன், பெருநாள் தினத்தன்று சகல முஸ்லிம்களும் சந்தோஷமாக உண்டு மகிழ வேண்டும் என்ற சிந்தனையும் நம் உள்ளத்துள் மிளிரவேண்டும். ‘நோன்புப் பெருநாள் தினத்தன்று யாரும் பசி பட்டினியுடன் இருக்கக் கூடாது’ என்ற சமுதாய நோக்கு முதலாவதாகவும், ‘ஸகாத்துல் பித்ர்’ வழங்கும் ஒவ்வொருவரும் ரமழான் மாதத்தில் விட்ட பிழைகளுக்குப் பரிகாரமாகவும் ‘ஸகாத்துல் பித்ர்’ இருப்பதனால், நோன்பாளிகள் பரிசுத்தவான்களாக மாறுவதனால் தனியார்கள் நன்மை பெறும் நோக்கு இரண்டாவதாகவும் விளங்குகின்றது. ஒவ்வொரு முஸ்லிமின் செயல்களும் மற்றைய சகோதர முஸ்லிம்களின் சுக துக்கங்களில் பங்குபற்றக் கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த உண்மையைத்தான், ‘ஸகாத்துல் பித்ர்’ நமக்கு கற்றுத் தருகின்றது. ஆகவே, நோன்புப் பெருநாளுக்காகத் தயாராகும் ஒவ்வொரு முஸ்லிமும், தங்கள் மீது கடமையான ‘ஸகாத்துல் பித்ர்’ வழங்கி நன்மைகளில் பங்கு பெறத் தயாராகுவோமாக. அத்துடன், நோன்பின் தத்துவங்களில் பிறர் பசியுணர்தலும், பிறரின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து, இதற்காக ஒரு மாதம் பயிற்சி பெற்ற நாம், இதயத்தை விரிவுபடுத்தி இப்பெருநாள் நன்நாளில் நம் பணிகளை ஆரம்பிப்போமாக. விடை பெறும் புனித ரமழானே, அருள் சுமந்து மீண்டும் வந்துவிடு. ஆமீன்…!!!

– மௌலவி ஐ. ஏ. காதிர் கான் (தீனி) –
மினுவாங்கொடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *