வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.- தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாடாகும். வடக்கு தெற்கு பேதமின்றி பிரஜைகளுக்கு நல்ல உணவு வேளையொன்று கிடையாது. வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. பிள்ளைகளுக்கு தொழில் கிடையாது. எமது பெண்கள் பாரியளவில் நுண்நிதிக்கடன்களில் சிறைப்பட்டுள்ளார்கள். எமது நாடு பெற்றகடனைச் செலுத்தமுடியாத பொருளாதாரத்தில் சிறைப்பட்டுள்ளது, எந்தவொரு முதலீட்டாளரும் வருகைதராத நாடாக மாறியுள்ளது. புதிய கடனைப் பெறமுடியாத அளவுக்கு உலகத்தில் நம்பிக்கை சிதைந்துவிட்டது. இந்த நாட்டை மீட்டுக்கவேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது? இந்த நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது பற்றிப் பேசுவதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
எமது நாட்டினல் தோன்றியுள்ள இந்த நெருக்கடி இயற்கை அனர்த்தமொன்றின் பிரச்சினையா? பாரிய வெள்ளப்பெருக்கு, சூறாவளி, சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையா? இல்லை. இது எமது நாட்டை நீண்டகாலமாக ஆட்சிசெய்த குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையாகும். குறிப்பாக எமது நாடு கடைப்பிடித்த அரசியல் கொள்கையும்இ பொருளாதாரக் கொள்கையும் இந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீட்புப்பெற முடியுமானால் இந்த அரசியல் கலாசாரமும் பொருளாதாரக் கொள்கையும் மாற்றமடைய வேண்டும். இந்த வருடத்தில் சனாதிபதி தேர்தல் நடைபெறுமென்பது எமக்குத் தெரியும். வடக்கின் மக்கள் சனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். எமது நாட்டுக்கு சனாதிபதியொருவரைத் தெரிவுசெய்தலானது கொழும்பின் தலைவரொருவரை நியமித்துக்கொள்கின்ற சிங்கள மக்களின் வேலையென்ற கருத்து நிலவுகின்றது. எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதிமார்கள் கடைப்பிடித்த கொள்கைகள் வடக்கிற்கும் தெற்கிற்கும் அழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதனால் நாட்டுக்கு தலைவர்களை தெரிவுசெய்கையில் வடக்கு மக்களின் முனைப்பான இடையீடு அவசியமென நாங்கள் நினைக்கிறோம்.
நாங்கள் உங்களை சந்திக்க வந்தது 13 பிளஸ் தருகிறோம்இ பெடரல் தருகிறோம், நீங்கள் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் எனக் கேட்பதற்காக அல்ல. நாங்கள் உங்களை சந்திக்க வந்தது இந்த நாடு வீழ்ந்துள்ள அழிவில் இருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுபற்றி பேசுவதற்காகவே. நீண்டகாலமாக எமது தலைவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் எமது நாட்டை மீட்டெடுக்க முடியுமா என்பதைப் பற்றி பேசுவதற்காகவே. எமது நாட்டுக்கு புதிய பாதையொன்று தேவை என்பதே எம்மனைவரதும் எதிர்பார்ப்பாகும். எனவே புதிய பாதையை தேடிக்கொள்வது பற்றி பேசுவதற்காகவே நாம் வந்திருக்கிறோம். எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டுமாயின் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டின் அரசியல் கலாசாரம் என்ன? மிகவும் அழிவுமிக்க பொலி்ட்டிகல் கல்ச்சரே இந்த நாட்டில் நிலவுகின்றது. ஊழல் மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. திறைசேரிக்கு வருகின்ற பொதுமக்களின் செல்வம் அமைச்சர்களின் கணக்குகளுக்கு கபடத்தனமாக வியாபாரிகளின் கணக்குளுக்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. திறைசேரிக்கு வந்த பணத்தை அரசியல்வாதிகள் விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா தரங்குன்றிய மருந்து சம்பந்தமாக குற்றச்சாட்டக்கு இலக்காகிய சுகாதார அமைச்சர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். நாட்டின் சனாதிபதிக்கு மத்திய வங்கி கொள்ளையடித்தல் பற்றிய குற்றச்சாட்டு நிலவுகின்றது. நிகழ்கால பிரதமர் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் சனாதிபதியை வங்கித் திருடன் எனக் கூறினார். இந்த ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திட வேண்டாமா?
எமது நாட்டின் வடக்கு மக்களும் தெற்கின் மக்களும் இந்த ஊழல்பேர்வழிகளின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்த ஊழல்பேர்வழிகள் வடக்கிலும் தெற்கிலும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டைக் கட்டியெழுப்ப இந்த ஊழலைத் தடுத்துநிறுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் அதனை சாதிப்போம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். மக்களின் பணத்தை விரயமாக்குகின்ற அரசியலை நிறுத்தவேண்டுமல்லவா? எமது நாட்டின் எந்தவிதமான நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாகவும் எந்தவோர் அமைச்சரினதும் வீடுகளுக்கான லயிற் பில் செலுத்த முடியாது. பாராளுமன்றத்தினால் அமைச்சருக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எனினும் அமைச்சர்களின் வீடுகளின் நீர்க் கட்டணம், லயிற் பில் மக்களின் பணத்திலிருந்தே செலுத்தப்படுகின்றது. ஒருசில அமைச்சர்களின் மாதாந்த லயிற் பில் ஒருஇலட்சத்து முப்பதாயிரம் ஆகும். செலுத்துவதோ மக்களின் பணத்தைக்கொண்டு, கழிப்பறை வசதிகள் வழங்கப்படுவதும் மக்களின் பணத்திலேயே. அமைச்சருக்கு, பாரியாருக்கு, அவரது பிள்ளைகளுக்கு அரசாங்கப் பணத்தில் வாகனம் வழங்கப்படுன்றது. இந்த விரயமிக்க அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கக்கூடாதா?
சனாதிபதிக்கு வெளிநாட்டு விஜயங்களுக்காக வரவுசெலவில் பணம் ஒதுக்கப்படுகின்றது. ஒதுக்கப்படுகின்ற அந்த பணத்தை சனாதிபதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலவழித்து முடித்துவிட்டார். கடந்த தினமொன்றில் 200 மில்லியன் ரூபாவை அவருடைய வெளிநாட்டு விஜயங்களுக்காக ஒதுக்கிக்கொண்டார். தனி ஒருவருக்காக அவ்வளவு பெருந்தொகையான பணத்தை செலவிடவேண்டுமா? இது எமது வைத்தியசாலைக்கு மருந்து கொள்வனவு செய்ய, பிள்ளைகளுக்கு கற்பிக்க, வசதிகளை வழங்க, கிராமத்து வீதிகளை அமைக்க, குடிநீர் வழங்கல் கருத்திட்டமொன்றை அமுலாக்க உள்ள பணமாகும். ஒருசிலர் இதனை நாசமாக்கி வருகிறார்கள். அதோ அந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் நிறுத்த வேண்டும்.
அது மாத்திரமல்ல எமது நாட்டில் குற்றச்செயல்கள், போதைத்தூள் வியாபாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளாவர். குற்றச்செயல் புரிபவர்கள், போதைத்தூள் வியாபாரிகள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அத்தகைய ஒரு நாடு எவ்வாறு முன்நோக்கி நகர்வது? எமது நாட்டில் சட்டமொன்று இருக்கிறது. சிறியவர்களுக்கு சட்டம் அமுலாக்கப்படுகின்றது. மேலே இருப்பவர்கள் சட்டத்திருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். நிகழ்கால பொலீஸ் மா அதிபர் உயர்நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவராவார். அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒருவரால் எவ்வாறு நாட்டில் நீதி நியாயமாக நிலைநாட்டப்படும்? அனைத்துக் கட்டமைப்புகளும் சீரழிந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாடு எவ்வாறு முன்நோக்கி நகரும்? உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பொலீசுக்குச் சென்றால் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கின்றதா? இப்படிப்பட்ட நம்பிக்கை கிடையாது. எம்மெதிரில் இருப்பது ஒரு சீரழிந்த நாடாகும். வடக்கில் தெற்கில்இ கிழக்கில் பேதமின்றி நாங்கள் சீரழிந்த தேசத்திற்கு இரையாகி உள்ளோம்.
இவ்வளவு அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நாட்டுக்கு புரியக்கூடிய அத்தனை அட்டூழியங்களையம் செய்துள்ள நிலையில் அவர்கள் எவ்வாறு அதிகாரத்தில் இருப்பது? அவர்கள் அதிகாரத்தைப் பேணிவருவதிலான இரகசியம் என்ன? அவர்கள் இனவாதத்தாலேயே அதிகாரத்தைப் பேணிவருகிறார்கள். ஏனைய அத்தனை பிரச்சினைகளையும் கீழடக்கி உள்ளநிலையில் சிங்களத் தலைவர்கள் நாடு, சமயம், தேசத்தைக் காப்பாற்றுவோம் எனும் பலகையைப் பிடித்துக்கொண்டு நாட்டை கிளர்ந்து விடுகிறார்கள். அதுதான் அவர்களின் இருப்பு, வடக்கு கிழக்கிலும் அப்படித்தான். இனவாதத்தை இந்த அழிவுமிக்க அரசியல்வாதிகள் இவர்களின் இருப்பிற்காக பிரதான காரணியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எம்மிடம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நோக்கு இருக்கவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எமது ஒற்றுமையைத் தடுத்தார்கள். வெள்ளைக்காரர்கள் எம்மை பிரித்தே ஆட்சிசெய்தார்கள். 1505 இல் இருந்து 1948 வரை வெளிநாட்டு வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம்.
1815 தொடக்கம் 1948 வரை முழு நாடுமே வெள்ளைக்காரரின் ஆட்சியின்கீழ் இருந்தது. 133 வருடங்களின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்ற கறுப்பு வெள்ளைக்காரர்கள் அதைவிட அதிகமாக எம்மை பிளவுபடுத்தினார்கள். எம்மால் தேசிய ஒற்றுமையை நிர்மாணிக்க முடியாமல் போயிற்று. 1948 இல் சசுதந்திரம் பெற்று 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். மலையக மக்களின் அரசியல் உரிமையை இல்லாதொழித்தார்கள். அதற்கெதிராக 1949 இல் திருவாளர் செல்வநாயகம் ‘தமிழ் அரசுக் கட்சியை’ உருவாக்குகிறார். 1956 இல் மொழிப்பிரச்சினையும் 1958 இல் தமிழ் சிங்கள கலவரமும் தோன்றியது. 1981 இல் யாழ் நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் யூலை கலவரங்களை உருவாக்கினார்கள். 2009 இல் யுத்தம் நிறைவடைகின்றது. யுத்தம் நிறைவடைந்தபின்னர் இந்த பிரச்சினை தீர்ந்ததா? 2015 அளவில் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகள் வருகின்றன. 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது. ஒட்டுமொத்த வரலாறுமே முரண்பாட்டு வரலாறாகும்.
எமது நாட்டின் பிரதான அரசியல் பிரவாகங்கள் என்பது மற்றவருக்கு எதிரான அரசியலாகும். தெற்கின் சிங்கள மக்கள் வடக்கிற்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். வடக்கின் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். முஸ்லீம் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கிறார்கள். எமது பாட்டன்மார்கள்இ தந்தையர்கள், தாய்மார்களே அந்த அரசியலைப் புரிந்தார்கள். அதன் விளைவு என்ன? எமது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் யுத்தம் புரிந்துகொண்டார்கள். அது மீண்டும் இடம்பெற இடமளிக்க வேண்டுமா? எமது பரம்பரையின் இரத்தத்தால் இந்த பெருநிலம் நனைந்தது. பெற்றோர்களின் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தோடியது. மனைவியர் கணவனை இழந்தார்கள். பெற்றோர் பிள்ளைகளையும் பிள்ளைகள் பெற்றோரரையும் இழந்தார்கள். முழுநாடுமே கவலைக்கிடமான நிலையை அடைந்தது.
நாங்கள் இந்த இனவாத அரசியல் கலாசாரத்தை தோற்கடித்திட வேண்டும். அது எமது எதிர்காலத் தலைமுறையினருக்காகவே. நாங்கள் வடக்கின் உண்மையான அரசியல் தலைவர்களுக்கு கூறுவது நீங்கள் உண்மையாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்திப்பீர்களாயின் எம்மோடு இணையுங்கள். வடக்கின் அரசியலை பிரச்சினைகளை தீர்த்துவைக்கின்ற அரசியலாக நாங்கள் மாற்றிடுவோமென நாங்கள் வடக்கின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைத்திடுவோம். நாங்கள் புதிதாக சிந்திப்போம். நாங்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு கூருணர்வற்றவர்களாக இருக்கக்கூடும். எனினும் உங்களின் வேதனையை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் புதியதொரு தேசத்தை உருவாக்க வேண்டும். எமது நாட்டில் இரண்டு பிரதான மொழிகள் இருக்கின்றன. இந்த இரண்டு மொழிகளுக்கு சம உரிமை உண்டு. அரசுடன் தனது மொழியில் அலுவல்களை மேற்கொள்வதற்கான உரிமை உண்டு. தமிழ் பிரஜையொருவர் பொலீசுக்குச் சென்று தனது மொழியில் முறைப்பாடு செய்வதற்கான உரிமை உண்டு. அரசாங்கத்திற்கு தனது மொழியில் கடிதமொன்றை அனுப்பினால் தனது மொழியிலேயே பதில் கிடைக்கவேண்டும். அதனால் அரச நிறுவனங்களுக்கு, முப்படையினருக்கு, அரசாங்கத்தின் முக்கியமான துறைகளுக்கு தமிழ் இளைஞர்களின் வீதத்தை அதிகரிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம்.
சமயமும் அப்படித்தான். சமயமென்பது தனது நம்பிக்கையாகும். நீங்கள் பிறப்பது இந்து தமிழ் சூழலில். உங்களின் சமயம், உங்களின் கலாசாரம் இந்த – தமிழ் கலாசாரமாக அமைகின்றது. நான் பிறப்பது சிங்கள, பௌத்த சூழலில். எனது கலாசாரம் சிங்கள பௌத்த கலாசாரமாகும். உங்களின் நம்பிக்கையைத் தாழ்த்தி எனது நம்பிக்கையை உயர்வானதாகக் கருதமுடியுமா? ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தை அனுட்டிப்பதற்கான பாதுகாப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகின்ற தேசமொன்றை நாங்கள் உருவாக்கவேண்டும். வரலாற்றுரீதியான தொல்பொருள் கட்டுபிடிக்கப்படுகையில் நாங்கள் சண்டையிடத் தொடங்குகிறோம். எமது பொறுப்பு என்ன? இந்த தொல்பொருட்களை தேசிய மரபுரிமையாகக்கருதி, பாதுகாத்து, பேணி, எதி்ர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதுதான் எமது பொறுப்பு. வரலாறுசார்ந்த இடங்கள் தோன்றுவது நாங்கள் பிரச்சினைபட்டுக் கொள்ளவேண்டிய ஒரு விடயமா? எம்மொவ்வரினதும் கலாவார வேறுபாடுகள் நிலவுகின்றன. உங்களின் பிரதான வைபவமான தைப்பொங்கல், முஸ்லீம்களின் பிரதான வைபவமான ரமழான், சிங்களவர்களின் பிரதான வைபவம் வெசாக் வைபவமாகும்.
கத்தோலிக்கர்களின் பிரதான வைபவம் நத்தார் வைபவமாகும். அவை எமது கலாசார அடையாளங்கள். நாங்கள் சமூகமொன்றை எந்த இடத்திற்கு கட்டியெழுப்ப வேண்டும்? ஒரு கலாசாரத்தை புறந்தள்ளுகின்ற மற்றைய கலாசாரம் உயர்வானது எனக்கூறுகின்ற சமூகத்திற்கா? பிறரது கலாசாரத்தை எற்றுக்கொள்கின்ற மதிப்பளிக்கின்ற சமூகமொன்று எமக்குத் தேவையில்லையா? இந்த தலைமுறையைக் கட்டியெழுப்புகின்ற அவசியப்பாடு எமக்கு நிலவுகின்றது. இந்த பண்டைய, இனவாத, பழங்குடிவாத மரபுகள் அனைத்தும் பண்டைய சமூகத்திற்கே சொந்தமானவையாகும். இனவாதம்இ சமயவாதத்தை நிராகரி்க்கின்ற மற்றவரின் அடையாளத்திற்கு மதிப்பளிக்கின்ற புதிய சமூகமொன்று எமக்குத்தேவை. அதனால் நாமனைவரும் பழைய ஆடைகளைக் கலைந்தெறிந்து புதிய ஆடைகளை அணிவதற்கான காலம் தற்போது பிறந்துள்ளது. நாங்கள் பழைய பேயின் பழைய அங்கி்யையே அணிந்துகொண்டிருக்கப் போகிறோமா? பகைமை, குரோதம், இரத்தம், முரண்பாடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், வெடிமருந்துகளின் மணம் வீசுகின்ற அங்கியை அணிந்தகொண்டு முன்நோக்கி நகரப்போகிறோமா? அதற்காக கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம் என்றே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நாங்கள் வாடிக்கையாளர்களா? நான் வியாபாரியல்ல. வாடிக்கையாளன் அல்ல. என்னை உள்ளிட்ட எமது இயக்கமும் இந்த நாட்டை மீட்டெடுக்க கூட்டு முயற்சியில் ஈடுபடுவோமென நான் முன்மொழிகிறேன். எமது எதிர்காலப் பிள்ளைகள் யுத்தம் புரியாத ஒரு நாடு எமக்குத்தேவை. எமது எதிர்கால சந்ததிக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்பி உயர்வாழ சிறந்த சுற்றுச்சூழலொன்று அவசியமாகும். எமக்கு புதிய அரசியலொன்று அவசியமாகும். அதோ அந்த புதிய அரசியலுக்காக ஒன்றுபடுவோமென நாம் முன்மொழிகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என நான் உங்களிடம் கேட்கப்போவதில்லை. நாங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடுவோமென்றே நான் நாங்கள் முன்மொழிகிறோம். பொருளாதாரம் பயணித்துக்கொண்டிருக்கின்ற திசை நல்லதா? சட்டத்தின் ஆட்சி நல்லதா? எங்கள் கல்வி நல்லதா? எங்கள் கமக்காரர்களின் வாழ்க்கை, மீனவர்களின் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பினை வைக்கமுடியுமா? எமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை வைக்க முடியுமா? அவை எதுவுமே இல்லாத ஒரு நாடுதான் இது.
இந்த பிரச்சினைகள் அனைத்துமே எமது அரசியல் அதிகாரநிலை ஏற்படுத்திய பிரச்சினைகளாகும். நெருக்கடிக்கான காரணம் அரசியல் எனில் தீர்வு இருப்பதும் அரசியலில்தான். எமது நாட்டின் இனவாதம் அரசியல் இனவாதமாகும். தத்தமது இருப்பு மற்றும் அதிகாரத்தை இனவாதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பியுள்ள அரசியலாகும். அதனை எவ்வாறு மாற்றியமைப்பது? இனவாத அரசியலுக்கு எதிராக தேசிய ஒற்றுமைக்கான அரசியலை கையில் எடுப்பதன் மூலமாகத்தான். தெற்கின் பெரும்பாலானவர்கள் இனவாதத்திற்கெதிரான கொடியை ஏந்தியுள்ளமை எமக்கு பெருமிதத்தை தருகின்றது. இனவாதக் குழுக்கள் இருப்பின் இனவாதத்திற்கெதிரான தேசிய ஒற்றுமைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம். இது எமது தலைமுறையின் பொறுப்பாகும்.
அதைப்போலவே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். எமக்கு வரலாற்றில் கைத்தொழிலாக்கம் பற்றிய ஓரளவு நோக்கு இருந்தது. அவையனைத்துமே அழிவடைந்தன. பரந்தனில் இரசாயன ஆலையொன்று இருந்தது. வாழைச்சேனையில் கடதாசி ஆலையொன்றுஇ காங்கேசன்துறையில் சீமெந்து ஆலையொன்று இருந்தது. தற்போது அந்த கைத்தொழிலாக்கம் எங்கே? வடக்கின் சிறிய கிராமங்களில் நெசவு நிலையங்கள் இருந்தன. அந்த நிறுவனங்கள் அனைத்துமே விற்கப்பட்டன. அல்லது மூடப்பட்டன. தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு முற்றாகவே தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் காரமான மிளகாய், முருங்கை, சின்னவெங்காயம் எமது ஊரின் சந்தைக்கு வந்தது. இன்று அவையனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் அதிகாரநிலையிடம் எமது உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்கள் இருக்கவில்லை. வட மாகாணத்தில் சிறப்பான பாலுற்பத்தி நிலவியது. இன்று எதையுமே உற்பத்திசெய்ய முடியாத தேசமாக மாற்றப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் தேசிய தலைவர்களுக்கு நாட்டை எந்த திசையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நோக்கு இருந்தது. இந்திய நோக்கு அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட எதிர்காலம் இன்று வெற்றியை அடைந்துள்ளது. சந்திரனுக்குச் செல்லும் இந்தியா, பிராந்தியத்திற்கு வாகனங்கள், மருந்துகள், உணவு, தொழில்நுட்பத்தை வழங்குகின்ற இந்தியா எவ்வாறு உருவாக்கப்பட்டது? அது இந்தியாவின் அப்துல் கலாமிற்கு சனாதிபதியாக, மன்மோகன் சிங்கிற்கு பிரதமராக, குறைந்த சாதியைச் சேர்ந்தவரென எற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பெண்ணுக்கு சனாதிபதி பதவியை வகிக்க இயலுமாகி உள்ளது.
பல்வேறு இனத்தவர்கள் இருக்கின்ற, பல்வேறு மதநம்பிக்கைகள் நிலவுகின்ற, பல்வேறு கலாசாரங்கள் நிலவுகின்ற ஒரு நாட்டை ஒருகொடியின்கீழ் கொண்டுவர இயலுமாகி உள்ளது. எமது வரலாறு மோதல்கள் நிரப்பிய ஒன்றாகும். புதிய அரசியல் மாற்றத்தை தொடங்குவோம். வடக்கின் தமிழ்த் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வது நாங்கள் ஒன்றுபடுவோம். வடக்கின் கிழக்கின் தெற்கின் மக்கள் அனைவரும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் வைத்த இந்த சிறிய அடியெடுப்பினை எமது நாட்டின் பாரிய வெற்றியில் நிறைவடையுமென நாங்கள் நம்புகிறோம்.