ஐசிசி இன் சிறந்த வீரர் விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் தெரிவாகியுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்காக ஆடவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களுக்கான பரிந்துறையில்அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி மற்றும் இலங்கையின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டிருந்தனர். அதில் மற்றைய இருவரையும் பின்தள்ளி இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் இவ்விருதை தனதாக்கிக் கொண்டார்.
பிரபாத் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்குப் பிறகு ஐசிசி இன் மாதாந்த சிறந்த வீரர் விருதைப் பெரும் 3ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த விருதை சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்திற்கான உத்வேகமாக கமிந்து மெண்டிஸ் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கமிந்து மெண்டிஸ் குறிப்பிடுகையில், ”இந்த மாதத்தின் ஐசிசி இன் சிறந்த ஆடவர் வீரராக நான் தேர்வு செய்யப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது எனது சர்வதேச வாழ்க்கைக்கு ஒரு உத்வேகமாக நான் கருதுகிறேன்.இது போன்ற ஒரு அங்கீகாரம் அணி, நாடு மற்றும் ரசிகர்களுக்கு நடுவில் வழங்குவதற்கு வீரர்களாகிய எங்களை மேலும், மேலும் உழைக்கச் செய்கிறது. அத்துடன் என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு வீரர்களான மார்க் அடேர் மற்றும் மாட் ஹென்றி ஆகியோருக்கு நான் சிறந்த வீரர்கள் மற்றும் நல்ல போட்டியாளர்களாக கருதுகிறேன்.” என்றார்.
2022 க்குப் பிறகு முதல் முறையாக இலங்கை தேசிய அணிக்கு திரும்பிய 25 வயதான கமிந்து மெண்டிஸ் பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி230 தொடரில் மெண்டிஸ் அதிரடி காட்டியிருந்தார். பின்னர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் மற்றும் 2ஆவது இன்னிங்களில் தொடராக இரு சதங்களை விளாசி இலங்கை அணியை வெற்றி பெறச்செய்தார். அத்துடன் 2ஆவது டெஸ்டடின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்கபமல் 92 ஓட்டங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)