பாரம்பரியம் நிகழ்ச்சியில் சவூதி அரேபிய தூதுவர் அமீர் அஜ்வத்
எதிர்வரும் (16) செவ்வாய்க்கிழமை இரவு 08.15 மணியளவில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் ”பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரில்” முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து புகழ் சேர்த்தோர் வரிசையில், சவூதி அரேபியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் அல்ஹாஜ் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ஓ.எல். அமீர் அஜ்வத் (நளீமி) அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
இவர், 1990 களில் ”இளைஞர் இதயம்” நிகழ்ச்சியைத் தொடராக மிகச் சிறப்பாக நடாத்தி, நேயர்களினதும், குறிப்பாக இளையோர்களது பேரபிமானம் பெற்றார். இளையோர்களுக்கு வழிகாட்டக் கூடிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, இவர் நடாத்திய இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் ஒலிபரப்புத்துறையிலும், இதர துறைகளிலும், உச்சம் தொட்டவர்களாக இருக்கின்றனர்.
மேலும் இவர், இஸ்லாமிய நற்சிந்தனை, திருக்குர்ஆன் விளக்கம், ஆங்கில மொழியிலான ஸஹர் சிந்தனை போன்றவற்றையும் வழங்கியுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளராகச் செயற்படும் ஓ.எல். அமீர் அஜ்வத் நளீமி ஓமான், யெமன் குடியரசுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராவார்.
பேருவளை – ஜாமிஆ நளீமிய்யா, பேராதனைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர், கொழும்பு பல்கலைக் கழகத்தில் ”சட்டமானி” மற்றும் ”சட்ட முதுமாணி” பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகவும் 1997 இல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ‘பாரம்பரியம்’ நிகழ்ச்சியை எம்.எஸ்.எம். ஜின்னா தொகுத்தளிக்க, முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் பாத்திமா ரினூஷியா தயாரித்தளிக்கிறார்.
( ஐ. ஏ. காதிர் கான் )