சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் அல்குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும்!
பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரமலான் மாதம் மாணவர்களால் ஓதப்பட்ட 30 அல்குர்ஆன்கள் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் கலாபீட பஸிய்யா மண்டபத்தில் நடைபெற்றது. கலாபீட பணிப்பாளர் ரயீஸுல் முகத்தம் மௌலவி எம் ஜே எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ .ஏ) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் மௌலவி எம் ஏ எம் அஸ்மிகான் (முஅய்யிதி) உட்பட விரிவுரையாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஷாதுலிய்யா தரிக்காவின் உலக ஆன்மீக தலைவர் ஷைகுஸ் ஸஜ்ஜாதா அஷ்ஷைக் மஹ்தி அல்பாஸி அன்னவர்களின் அனுமதியுடனும் இலங்கைக்கான கலிபத்துல் குலபா மௌலவி அல் உஸ்தாத் எம். இஸட் முஹம்மத் ஸுஹூர் (பாரி)யின் ஆலோசனையுடன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த 30 அல்குர்ஆன்கள் இறைத் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரிலும், ஷாதுலிய்யா தரீக்காவின் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (றழி) உட்பட ஷாதுலிய்யா மஷாயிக்மார்கள், அண்மையில் இறையடி சேர்ந்த தரிக்காவின் முன்னால் உலக ஆன்மீக தலைவர் அஷ்ஷைக் அஜ்வாத் அப்துல்லாஹ் அல்பாஸி (றஹ்), அஹ்லு பைத்துகள், முன்னாள் கலீபத்துல் குலஃபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி), எம்மை விட்டும் பிரிந்த கலீபாக்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சீனன் கோட்டையில் வாழ்ந்து மரணித்தவர்கள், கலாபீடத்துக்கு பாடுபட்டு மறைந்தவர்கள், அனைத்து முஸ்லிமான ஆண்கள் பெண்கள் பேரிலும் தமாம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பலஸ்தீன நாட்டில் நிரந்தர சமாதானம், நிம்மதி ,சுபிட்சம் வேண்டியும் இங்கு விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி அஹ்மத் முபாரக் (மன்பஈ) ஹலரா மஜ்லிஸை நடத்தினார்.
(பேருவளை பி. எம் முக்தார்)