மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் கமிந்து மெண்டிஸ்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையினை தெரிவு செய்து விருதினை வழங்கி கௌரவித்து வருகின்றது. அந்தவகைளில் கடந்த மார்ச் மாதத்திற்கான வீதிற்கு மும்மூன்று வீர இவீராங்கனைகள் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பாக விளையாடியதற்காக ஆடவர் அணியிலிருந்து மூவரும் மகளிர் அணியிலிருந்து மூவரும் ஐ.சி.சி.யினால் வழங்கப்படும் சிறந்த வீரஇ வீராங்கனைக்கான விருதுகளைப் பெறுவதற்கான போட்டியாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதற்கமைய ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆண்களுக்கான வீரர் பட்டியலில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் ஆப்காணிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் விளாசியிருந்தார்.
பின்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் இரு சதங்களை விளாசி இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். அது மாத்திரம் இன்றி 7ஆவது மற்றும் 8ஆவது துடுப்பாட்ட வரிசையில் களம் நுழைந்து இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெறுமையினைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு மார்ச் மாதத்தில் துடுப்பாட்டத்தில் அசத்திய கமிந்து மெண்டிஸ் பெரும்பாலும் கடந்த மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதினை வெற்றி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு தலைமை தாங்கி, அயர்லாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அணித்தலைவரான மார்க் அடேர் அடுத்த வீரராக இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்து அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர் முழுவதும் பந்துவிச்சில் அசத்திய நியூசிலாந்தின் மேட் ஹென்றி பெயரிடப்பட்டுள்ளார்.
அதேபோல் மகளிர் விருதுக்கான பட்டியலில் துடுப்பாட்ட வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். அதற்கமைய நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தனது துடுப்பாட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு தொடரை வென்று கொடுத்து, துடுப்பாட்ட வீராங்கனை தரவரிசையில் முதலிடம் பிடித்த மையா பௌச்சியர் இடம்பெற்றுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் இடம்பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 தொடரில் சகலதுறையில் பிரகாசித்த நியூசிலாந்தின் அமெலியா கெர் 3ஆவது வீராங்கனையாக இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)