அறிவுச் சுரங்கம் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி முதலிடம்
ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடம் தோறும் நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி இம்முறை இன்று 04.04.2024 அன்று கொழும்பு 10 அல்ஹிதாயா கல்லூரி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் மண்டபத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற திருகோணமலை வெள்ளை மணல் அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். இரண்டாம் இடத்தை திருகோணமலை வெள்ளை மணல் அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவர்களும் மூன்றாம் இடத்தை ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றுக் கொண்டனர்.
முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் வெற்றிக் கிண்ணமும் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் பதக்கமும் சான்றிதழும் Colombo Commodities நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஸி. பஹார்தீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Colombo Commodities நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஸி. பஹார்தீன் அவர்களும் விஷேட அதிதிகளாக Colombo Commodities நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஹாஜியானி திருமதி ஸஹ்ரியா பஹார்தீன், பாஸித் பஹார்தீன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கொழும்பு 10 அல்ஹிதாயா கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எப். ஸரூனா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவின் பொறுப்பாளர் திருமதி பாத்திமா றினூஸியா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
(அஷ்ரப் ஏ சமட் )