உள்நாடு

“இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆளுமை மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்..!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர், இஸ்லாமிய அறிஞர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில்,

”மௌலவி இப்ராஹிம் இலங்கையில் நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர் ஆவார். முஸ்லிம் சமூகத்தின் பெரும் ஆளுமையாக செயற்பட்ட இவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிய கற்கைபீடத்தினை நிருவகிப்பதிலும் அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, அமீராகவும் செயற்பட்டிருந்தார்.

அன்னார் இலங்கை முஸ்லிம் சமூகத்தை அறிவு சார்ந்த சமூகமாக வழிநடத்துவதிலும், எதிர்கால அறிவுசார் புத்தாக்க விடயங்களை முன்கொண்டு செல்வதிலும் பெரும் பங்காற்றியவர். மேலும், நாடு பூராகவும் தனது தஃவா பணிகளை முன்னெடுத்து, இஸ்லாமிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை நல்கியவராவார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைநெறியில் முதல் இடத்தை பெற்ற அவர், அப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அரபு கற்கை நெறிகளுக்கான ஆய்வாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவர் ஒரு சிறந்த வாசகர். அரேபிய மொழியிலிருந்து பல புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார்.

தனது வாழ்நாளின் முழுப்பகுதியையும் இஸ்லாமியப் பணிகளுக்காக அர்ப்பணித்திருந்த அன்னாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

(ஊடகப்பிரிவு- ரிஷாட் பதியுதீன் பா. உ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *